திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலையில் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுப்பு


ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு; 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள்
x
ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு; 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள்
தினத்தந்தி 19 Dec 2020 8:42 AM IST (Updated: 19 Dec 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே ஜவ்வாதுமலையில் நவிரமலை கல்வெட்டுகள் மற்றும் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி, காணி நிலம் மு.முனிசாமி ஆகியோர் தொடர்ச்சியாக ஜவ்வாதுமலையில் உள்ள வரலாற்றுத் தடயங்களை ஆவணப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரும், இதழியலாளர் பிரியம்வதா விஜயகுமாரும் கள ஆய்வில் பங்கேற்றனர்.

இதுகுறித்து முனைவர் க.மோகன்காந்தி கூறியதாவது:-
நவிரமலை
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலைப் பகுதிகளில் ஜவ்வாதுமலையின் பண்டைய பெயரான “நவிரமலை” என்னும் கல்வெட்டுகளும், 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகளும் எங்கள் ஆய்வுக்குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் எங்களுடன் களஆய்வில் ஈடுபட்டது, எங்கள் ஆய்வுக்குழுவினருக்குக் கிடைத்த சிறப்பாகும்.முதலில் புதூர் நாட்டுக்கு உட்பட்ட மொழலை சிவாலயத்தில் உள்ள நான்கு கல்வெட்டுகள் கண்டு வாசிக்கப்பட்டன.

இக்கல்வெட்டுகள் சோழர், விஜய நகர மன்னர்களை பற்றியச் செய்திகளை பதிவு செய்கின்றன. கோவிலின் இடது பக்கத்தில் நான்கு கல்வெட்டுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கல்வெட்டு கி.பி. 16-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர காலத்து மன்னன் கம்பண்ணனை பற்றி பதிவு உள்ளது. இவரை, மகாமண்டலேஸ்வரன் என்றும் கம்பண்ண உடையார் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது. 

ஆடையூர் நாட்டில் நவிரமலை (ஜவ்வாதுமலை) இருந்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது.

வரியை முறைப்படுத்தும் கல்வெட்டு
இரண்டாவது கல்வெட்டு வரி வசூல் செய்யும் அரசாணை கல்வெட்டாகும். இக்கல்வெட்டு ஆடையூர் நாட்டில் நவிரமலை நாடு இருந்ததைக் கூறுகிறது. ஆடையூர் என்பது திருவண்ணாமலைக்கு அருகே உள்ள ஒரு ஊராகும். அவ்வூரை தலைமையிடமாகக் கொண்டு ஆடையூர் நாடாழ்வான் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புதூர்நாடு பகுதியை ஆட்சி செய்துள்ளார். ஆடையூர் நாடாழ்வானுக்கும் மேலே ஒரு அரசு இருந்திருக்கிறது.

அது சோழர்களாக இருக்கலாம். சோழர்கள் வரி பற்றிய ஆணையை இக்கல்வெட்டில் கூறியுள்ளனர். அதில், நாங்கள் சொல்லும் வரியை மட்டுமே மக்களிடம் இருந்து ஆடையூர் நாடாழ்வான் பெற வேண்டும். மீறி அதிகமான வரியை நவிரமலை மக்களிடம் இருந்து பெற்றால், நாடாழ்வான் என்னும் பட்டம் அம்மன்னனுக்குக் கிடையாது என்ற கருத்தை முன்வைக்கிறது. எனவே வரியை முறைப்படுத்தும் ஒரு கல்வெட்டாக இது உள்ளது.

சிவன் கோவிலுக்கு தானம்
மூன்றாவது கல்வெட்டு சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டாகும். குலோத்துங்கனின் 41-ம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதில் நிகரிலி சோழ மண்டலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கர்களிடம் இருந்து ராஜராஜசோழன் இப்பகுதிகளை கைப்பற்றி உள்ளான். நிகரிலி என்பது ராஜராஜனுக்கு யாரும் நிகர் இல்லாதவர்கள் என்ற பொருளில் இம்மண்டலத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நிகரிலி சோழமண்டலம் என்பது தர்மபுரி, கர்நாடகப் பகுதிகளில் உள்ள பெங்களூரு, கோலார், தும்கூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். சில கல்வெட்டுகள் ஜவ்வாதுமலை ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் இருந்ததையும் குறிப்பிடுகின்றன. இங்கு நிகரிலி சோழ மண்டலம், தகடூர் (தர்மபுரி) நாட்டை குறிப்பிடுவதால் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர் நாட்டுப் பகுதி ஆடையூர் நாட்டிலும், தகடூர் நாட்டிலும் இடம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. இக்கல்வெட்டு சிவன் கோவிலுக்குத் தானம் தந்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

நான்காவது கல்வெட்டு, ஆடையூர் நாட்டில் உள்ள நவிரமலை நாட்டில் வேளாண்மைச் செய்யும் பொருட்டு கூலி ஆளுக்கு 5 தர வேண்டும். அது பணமா, நெல் அளவா என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. இதன் மூலம் இம்மலை மக்களின் வேளாண் வாழ்வியல் பற்றிய குறிப்புகளை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கற்கருவிகள்
கல்கருவிகள் அல்லது கற்கோடாரிகள் என்று இதனை குறிக்கலாம். இது, கோடரிகளை போல் அடிப்பகுதியில் அகன்றும், கூர்மையாகவும் இருக்கும். மேல் பகுதி கையில் அடங்கும் வண்ணம் வடிவமைக்கப்படும் கற்காலக் கருவியாகும். இக்கற் கருவிகள் புதூர் நாட்டுக்கு உட்பட்ட சித்தூரில் உள்ள அனுமன் கோவிலில் 12 கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதன் பழமை குறித்து, இவ்வாய்வில் ஈடுபட்டிருந்த இந்திய தொல்பொருள் துறையில் இருந்து ஓய்வுப் பெற்ற பெ.வெங்கடேசன் இந்தக் கல் கருவிகள் குறித்துக் கூறும்போது, மனிதன் இரும்பையும், செம்பையும் கண்டறிவதற்கு முன்பாகப் பயன்படுத்திய கற்கருவிகள் ஆகும். இதன் காலம் இன்றிலிருந்து 7,000 ஆயிரம் ஆண்டுகள் பழமை உடையது, எனக் கூறுகிறார்.

ஜவ்வாதுமலைப் பகுதிகளில் கிடைத்த 4 கல்வெட்டுகளிலும் இதற்கு முன்பாக எங்கள் ஆய்வுக்குழு கண்டறிந்த 4 கல்வெட்டுகளிலும் ஜவ்வாதுமலையின் பெயர் நவிரமலை என்று வருகிறது. 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நூல்களில் பத்துப்பாட்டில் ஒன்றான “மலைபடுகடாம்” என்னும் நூலும் இம்மலையை நவிரமலை என்றே கூறுகிறது. மெட்ராஸ் சென்னை என்றானது போல, பம்பாய் மும்பை என்றானது போல, ஜவ்வாதுமலை அதன் பண்டைய பெயரான நவிரமலை என்று பெயர் மாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் எங்கள் ஆய்வுக்குழு கேட்டுக் கொண்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story