ஊட்டி பைன் பாரஸ்ட்டில் குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
ஊட்டி பைன் பாரஸ்ட்டில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழுவின் மூலம் பைன்பாரஸ்ட் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உயரமாக வளர்ந்து காணப்படும் பைன் மரங்கள் மற்றும் கீழ்ப்பகுதியில் காமராஜ் சாகர் அணையின் எழில் மிகுந்த அழகை கண்டு ரசிக்கலாம்.
கடந்த ஆண்டு மழையால் சேறும், சகதியுமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் இருந்தது. தொடர்ந்து கற்களை கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு 8 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
ஊரடங்கு நேரத்தில் சூழல் மேம்பாட்டு குழுவினர் கடந்த பருவமழை காலங்களில் கீழே விழுந்த மரங்களை அப்படியே விடாமல், துண்டு, துண்டாக வெட்டி இருக்கைகளாக வடிவமைத்து உள்ளனர். இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதில் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாக உள்ளது.
மேலும் மரத்தால் ஆன இருக்கைகள் சாயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். அத்துடன் அங்கு சுற்றுலா பயணிகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் குதிரை சவாரி செய்து வருகின்றனர்.
பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தில் நுழைவு கட்டணம் ரூ.10 ஆக இருந்தது. தற்போது அது ரூ.20 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் சூட்டிங்மட்டம் பகுதிக்கு செல்ல நுழைவு கட்டணம் ரூ.20 ஆகவும், வீடியோ கேமரா பயன்படுத்த ரூ.1000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story