மேட்டுப்பாளையத்தில், குடிநீர் திட்ட பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு - ஊர்வலமாக வந்த தி.மு.க.வினர் 31 பேர் கைது


மேட்டுப்பாளையத்தில், குடிநீர் திட்ட பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு - ஊர்வலமாக வந்த தி.மு.க.வினர் 31 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2020 5:13 PM IST (Updated: 19 Dec 2020 5:13 PM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் திருப்பூர் 4-வது குடிநீர் திட்ட பணியை தடுத்து நிறுத்த திரண்ட குடிநீர் பாதுகாப்பு குழுவினரால் பரபரப்பு ஏற்பட்டது.ஊர்வலமாக வந்த தி.மு.க.வினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் பவானி ஆற்று நீரை ஆதாரமாகும் திருப்பூர் 4-குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல் பவானிசாகர் அணையின் நீர்தேக்க பகுதி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்று மேட்டுப்பாளையம் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் அரசுக்கு வலியுறுத்தும் வண்ணம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் திருப்பூர் 4-வது குடிநீர் திட்டப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் சுமார் 100 பேர், குடிநீர் திட்ட பணிகளை தடுத்து நிறுத்துவதாக ஏற்கனவே அறிவித்தப்படி நேற்று மேட்டுப்பாளையம்-அன்னூர் ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையம் முன்பு திரண்டனர். இதற்கிடையில் தி.மு.க.வினர் கோஷங்களை முழங்கிக் கொண்டே தீயணைப்பு நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத் தினர். இதில் 31 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தனியார் வாகனம் மூலம் தனியார் மண்டபத்தில் கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் குடிநீர் திட்ட ஆலோசகர்கள் தர்மராஜ், ஜெயச்சந்திரன், மாநகராட்சி பொறியாளர்கள் பிரபாகரன், திருநாவுக்கரசு ஆகியோர், திரண்டிருந்த குடிநீர் பாதுகாப்பு குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்திருந்தனர்.

இந்த நிலையில் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி ஆகியோரிடம், "இங்கு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் வர வேண்டும். பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா, கலெக்டர்மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இங்கு வரமாட்டார்கள். குடிநீர் பாதுகாப்பு குழுவின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் சென்று கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரைச் சந்தித்து உங்களது கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவியுங்கள் என்று கூறினார். ஆனால் குடிநீர் பாதுகாப்பு குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்று அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த சம்பவம் காரணமாக மேட்டுப்பாளையம்- அன்னூர் ரோட்டில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

Next Story