கீழக்காவட்டாங்குறிச்சியில், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு - முன்னோர்கள் பயன்படுத்திய வரகு குழியா?


கீழக்காவட்டாங்குறிச்சியில், சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு - முன்னோர்கள் பயன்படுத்திய வரகு குழியா?
x
தினத்தந்தி 19 Dec 2020 6:37 PM IST (Updated: 19 Dec 2020 6:37 PM IST)
t-max-icont-min-icon

கீழக்காவட்டாங்குறிச்சியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அது முன்னோர்கள் பயன்படுத்திய வரகு குழியா? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் வடக்கு வீதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்போது திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து, அந்த பள்ளத்தை மூட நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் ஏற்கனவே மூடப்பட்ட பள்ளத்தின் அருகிலேயே தற்போது திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக ஏற்பட்ட பள்ளமா? அல்லது முன்னோர்கள் தானிய சேமிப்புக்கு பயன்படுத்திய வரகு குழியா? என்ற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இந்த பள்ளம் 15 அடி ஆழத்துக்கு மேலும், 10 அடி அகலத்திற்கும் அதிகமாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், திடீர் பள்ளம் ஏற்படுவது ஒருபுறம் ஆச்சரியத்தையும், மற்றொருபுறம் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், கால்நடைகள் இந்த திடீர் பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Next Story