வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கோஷம் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு
காணொலி காட்சி மூலம் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
கொரோனா ஊரடங்கினால் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். இதில், விவசாயிகள் தங்களது குறைகளை காணொலி காட்சி மூலம் கலெக்டரிடம் தெரிவித்தனர்.
பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், பெரம்பலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுடன் நடத்திய கலந்துரையாடலில், அவரிடம் விவசாயிகள் கோரிக்கைகளை பேச விடாமல் தடுத்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்யக்கோரியும் கூட்ட அரங்கிலேயே கண்டன கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் பேசுகையில், தமிழகம் முழுவதும் தோட்டக்கலைத்துறை மூலம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கு, கூடுதல் மின்சாரம் பயன்படுத்தியதாக கட்டாயமாக அபராதம் விதிக்கப்படுகிறது. அதனை கைவிட வேண்டும், என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்லத்துரை பேசுகையில், மழையினால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு நிவாரண தொகை வழங்கிட வேண்டும், என்றார்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் பேசுகையில், யூரியா உரம் கடத்தல், போலி உரம், போலி மருந்து விற்பனை தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன வெங்காய விதை வேப்பூர் வட்டாரத்திற்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தோட்டக்கலைத்துறையினர் மிளகாய் செடிகளை அந்தந்த பருவங்களில் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story