மாவட்டத்தில் அடைமழை சத்துணவு சமையல் கூடம் இடிந்து விழுந்தது
மாவட்டத்தில் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. கீரமங்கலம் அருகே சத்துணவு சமையல் கூடம் இடிந்து விழுந்தது.
ஆவுடையார்கோவில்,
ஆவுடையார்கோவில் பகுதியில் நேற்று முன்தினம் முதல் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. மழை காரணமாக தென் பகுதியில் ஒரு சில ஏரிகள் மட்டும் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதில், பரிவீர மங்களம் ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறிக் ்கொண்டிருக்கிறது. அருகில் உள்ள தாழனூர் ஏரியும் நிரம்பி உள்ளது. ஆனால், வடபகுதியில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமல் இருக்கிறது.
இலுப்பூர், போலம்பட்டி, அன்னவாசல், சித்தன்னவாசல், வீரப்பட்டி, போலம்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, செங்கப்பட்டி, குடுமியான்மலை, காட்டுப்பட்டி, குளவாய்ப்பட்டி, புதூர், பரம்பூர், வயலோகம், கடம்பராயன்பட்டி, கீழக்குறிச்சி, பெருமநாடு, மேட்டுச்சாலை, சென்னப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதிகளில் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. வயல்களில் தேங்கிய மழைநீரை விவசாயிகள் கால்வாய் அமைத்து வெளியேற்றி வருகின்றனர். மழையினால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீரமங்கலம் அருகே பனங்குளம் வடக்கு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடம் சேதமடைந்ததால் புதிய சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், பழைய பழுதடைந்த சமையல் கூடம் இடிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் நின்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழையால் பழுதடைந்த சமையல் கூடம் இடிந்து விழுந்தது. இதனை, பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக அகற்றினார்கள்.
கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமம் பூசாரி தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, கோவிந்தன் ஆகியோருக்கு சொந்தமான கூரை வீடுகள் நேற்று இரவு பெய்த தொடர் மழையின் காரணமாக இடிந்து விழுந்தன.
விராலிமலை ஒன்றியம், ஆவூர், மண்டையூர், மாத்தூர், கத்தலூர், வேலூர், பாக்குடி, சூரியூர், குன்னத்தூர், களமாவூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விளைந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று குளத்தூர் தாலுகா மாத்தூர் அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தை சேர்ந்த அமராவதி என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. கூலி வேலை செய்துவரும் அமராவதியின் கணவர் இறந்து விட்டார். 2 குழந்தைகள் மற்றும் மாமியாருடன் அந்த வீட்டில் வசித்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குமாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கருத்தபாண்டி பாதிக்கப்பட்ட வீட்டை பார்வையிட்டு இழப்பீடு கிடைக்க அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார்.
Related Tags :
Next Story