காதல் தொல்லை கொடுத்ததால் விபரீத முடிவு: பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - மெக்கானிக் கைது
வெள்ளகோவிலில் காதலிக்கும்படி தொல்லை கொடுத்ததால் மனமுடைந்த மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வெள்ளகோவில்,
வெள்ளகோவில் இந்திரா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் நந்தகுமார் (வயது 25). இருசக்கர வாகன மெக்கானிக். இவர் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் 15 வயது மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் நந்தகுமாருக்கு அறிவுரை கூறியுள்ளனர். ஆனாலும் நந்தகுமார், அந்த மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தியும், காதலிக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவியின் பெற்றோர் நந்தகுமார் மீது காங்கேயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து நந்தகுமாரை அங்கு இருக்க வேண்டாம், வேறு எங்காவது சென்று உறவினர் வீட்டில் தங்கிக்கொள் என எச்சரித்தனர். இதையடுத்து நந்தகுமார் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். ஆனால் தனது பெற்றோரை பார்க்க வருவது போல் நந்தகுமார், அந்த மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி தன்னால் படிக்க முடியவில்லை என்றும், மன உளைச்சலாக இருப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் ஒரு அறைக்கு சென்ற மாணவி கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். அதன்பின்னர் கதவு நீ்ண்டநேரமாக திறக்கவில்லை. பெற்றோர் வந்து கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை. பின்னர் வீட்டின் மேலே ஏறி ஓட்டை பிரித்து உள்ளே பார்த்தனர். அப்போது அந்த மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனே வீட்டிற்குள் சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த மாணவியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மாணவியின் தாயார் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் மாலா ஆகியோர் விசாரித்து மாணவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக நந்தகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நந்தகுமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story