வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - கடும் குளிரிலும் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர்


வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - கடும் குளிரிலும் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்தனர்
x
தினத்தந்தி 20 Dec 2020 4:00 AM IST (Updated: 20 Dec 2020 12:25 AM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கடும் குளிரிலும் சுற்றுலா இடங்களை பார்த்து ரசித்தனர்.

கொடைக்கானல்,

‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் பலரும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, கொடைக்கானலுக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது கொடைக்கானலுக்கு, குறிப்பாக வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். அதன்படி நேற்று வார விடுமுறையையொட்டி அதிக அளவு சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.

நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்தனர். குறிப்பாக இளைஞர்கள் ஏராளமானோர் சுமார் 500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வருகை தந்தனர். இதனால் கொடைக்கானல் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது போக்குவரத்து போலீசார் கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இதற்கிடையே கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பனியும், சாரல் மழையும் ஒருசேர குளிர்வித்து வருகிறது. காலை முதலே அடர்ந்த மேகமூட்டத்துடன் கூடிய பருவநிலை காணப்பட்டதுடன், கடும் குளிரும் நிலவியது. இந்த இதமான சூழலை கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். மேலும் அவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பைன் மரக்காடு, கோக்கர்ஸ் வாக், பில்லர் ராக்ஸ், பிரையண்ட் பூங்கா உள்பட பல்வேறு சுற்றுலா இடங்களையும் கண்டு ரசித்தனர். இதுதவிர சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் சிலுவை பூக்கள்

கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சிலுவை வடிவிலான பூக்கள் அதிக அளவு பூத்துக்குலுங்கும். இவற்றை சிலுவை பூக்கள் என்றும் பொதுமக்கள் அழைக்கின்றனர். அதுவும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்த பூக்கள் பூத்துக்குலுங்குவதால், அவை பலரையும் வெகுவாக கவர்ந்திழுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் மின் அலங்காரம் செய்து, அவற்றில் நட்சத்திர மின் விளக்குகளை எரியவிட்டுள்ளனர். இதற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது சிலுவை பூக்கள் அதிக அளவு பூத்துக்குலுங்குகின்றன. அவற்றை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

Next Story