மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு அமித்ஷா அழைப்பு அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்


மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு அமித்ஷா அழைப்பு அடுத்த வாரம் டெல்லி செல்கிறார்
x
தினத்தந்தி 20 Dec 2020 3:52 AM IST (Updated: 20 Dec 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி எடியூரப்பாவை டெல்லிக்கு வரும்படி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, அடுத்த வாரம் முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி செல்ல உள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களை நிரப்ப முதல்-மந்திரி எடியூரப்பா நடவடிக்கை எடுத்து வருகிறார்.

குறிப்பாக மாநிலத்தில் கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்த மாற்று கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், மற்றும் எம்.எல்.சி.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் ஆலோசிக்க 3 முறை எடியூரப்பா டெல்லி சென்றிருந்தார்.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிற தலைவர்களை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். ஆனால் பல்வேறு காரணங்களை காட்டி மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் அனுமதி வழங்கவில்லை.

இதனால் மந்திரி பதவியை எதிர்பார்த்து காத்திருந்து வரும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் ஏமாற்றம் அடைந்தார்கள். மந்திரிசபை விரிவாக்கமும் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணம் இருந்தது. இந்த நிலையில், கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் வருகிற 27-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தேர்தல் முடிந்ததும் ஜனவரி மாதத்தில் மந்திரிசபை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் மந்திரிசபை விரிவாக்கத்திற்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அனுமதி அளிக்காமல் இருந்ததாக தகவல் வெளியானது. முதல்-மந்திரி எடியூரப்பா 3 முறை டெல்லி சென்ற போதும், அமித்ஷாவை சந்தித்து பேசுவதற்கு, அவருக்கு அனுமதி கிடைக்கவிலலை.

இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் மற்றும் மாநில அரசியல் குறித்து பேசுவதற்காக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசுவதற்காக டெல்லிக்கு வரும்படி எடியூரப்பாவுக்கு, அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிந்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி செல்ல உள்ளார்.

அதாவது வருகிற 27-ந் தேதி அல்லது 28-ந் தேதி எடியூரப்பா டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு அமித்ஷாவை சந்தித்து மந்திரிசபை விரிவாக்கம் அல்லது மந்திரிசபையை மாற்றியமைப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பின்பு கர்நாடக மந்திரிசபை அடுத்த மாதம் (ஜனவரி) முதல் வாரம் விரிவாக்கம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் மந்திரி பதவி கேட்டு எம்.எல்.ஏ.க்கள் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் அமித்ஷாவின் அழைப்பு காரணமாக முதல்-மந்திரி எடியூரப்பாவும் உற்சாகம் அடைந்துள்ளார்.


Next Story