பெரம்பலூர் அருகே ஓடைப்பாலத்தின் கீழ்ப்பகுதியில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்துக்கு சிரமப்படும் கிராம மக்கள்
பெரம்பலூர் அருகே ஓடைப்பாலத்தின் கீழ்ப்பகுதியில் மழைநீர் தேங்குவதால் அந்த வழியாக சென்று வரும் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் நான்கு வழிச்சாலையில் செங்குணம் ஊராட்சிக்கு செல்லும் பிரிவு சாலை சந்திப்பில் வாகனங்கள் திரும்பும்போது, அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மார்க்கத்தில் இருந்து செங்குணம் பிரிவு சாலைக்கு வாகனங்களில் செல்வோர் திரும்புவதை தவிர்ப்பதற்காக, போக்குவரத்து போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி வாகனங்கள் செல்ல முடியாதவாறு செய்தனர்.
இதனால் அரசு டவுன் பஸ்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள், வேளாண்மை பணிக்கான பொருட்களை கொண்டு செல்லும் டிராக்டர்கள், லாரிகள் உள்ளிட்டவை 2 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ரோவர் கலைக்கல்லூரி அருகே உள்ள யூ வளைவில் திரும்பி, மீண்டும் 2 கி.மீ. கடந்து செங்குணம் பிரிவு சாலையில் செல்ல வேண்டியது உள்ளது.
அவதி
இதனை தவிர்க்கும் வகையில் செங்குணம் பிரிவு சாலையில் உள்ள ஓடைப்பாலத்தின் கீழே உள்ள நீர்வழிப்பாதையை பொதுமக்கள் ேபாக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் எளம்பலூர் ஊராட்சி பகுதியில் இருந்தும், பெரம்பலூர், எளம்பலூர், சிறுகுடல் மற்றும் பிறபகுதிகளில் இருந்தும் செங்குணத்திற்கு வருபவர்களும், செங்குணம் பொதுமக்களும் அந்த வழியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் மழைக்காலத்தில் மழைநீர் அந்த வழியில் தேங்கி சேறும் -சகதியுமாக மாறிவிடுவதால், வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் பெரும் இடையூறாக உள்ளது.
இந்த வழியில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஓடைப்பாலத்தில் கீழ்ப்பகுதியில் நீர்வழிப்பாதையில் செல்லும் மழைநீரை வேறுபாதையில் திருப்பி விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர், எளம்பலூர் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு செங்குணம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story