வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து ேதசிய தலைமை முடிவெடுக்கும்
வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
பெரம்பலூர்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண்மை சட்டங்களின் நன்மைகளை விளக்கி விவசாயிகளிடம் கூறும் வகையில், விவசாயிகளின் நண்பன் மோடி என்ற பெயரில் பா.ஜ.க. சார்பில் அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற, விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து வந்த பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், வழியில் பெரம்பலூர் வந்தார். அவர் துறைமங்கலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
தமிழகத்தில் பா.ஜ.க.வின் தேர்தல் கூட்டணி குறித்தும், முதல்- அமைச்சர் வேட்பாளர் குறித்தும் கட்சியின் தேசிய தலைமை முடிவெடுக்கும்.அதேபோல் தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தும் கட்சி மேலிடம் முடிவெடுக்கும்.
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்
தற்போது பிளஸ்-2 பாடத்திட்டத்தில் பாடத்தொகுப்பு குறைப்பு செய்துள்ளதால், நீட் தேர்வின்போது மாணவ-மாணவிகள் தேர்வை எதிர்கொண்டு எழுதுவதற்கு சிரமப்படுவார்கள் என்ற நடைமுறை கருத்து உள்ளது. அதை ஏற்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், ஊடகத்தினர் ஆகியோர் நீட், கேட், பொறியியல் (ஜே.இ.இ) தேர்வு, ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். சட்ட நுழைவுத்தேர்வு ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான ஆர்வத்தை மாணவ, மாணவிகளிடம் புகுத்தி, போதிய அறிவுடன் தேர்வு எழுதிட ஊக்கப்படுத்திட வேண்டும்.
புதிய வேளாண்மை திட்டங்களின் நன்மைகள் குறித்து ஆயிரம் இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தும் இயக்கம் கடந்த 8-ந்தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 200 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. நாளை (அதாவது இன்று) தஞ்சையில் நடைபெற உள்ள விவசாயிகள் சந்திப்பு இயக்க கூட்டத்தில் மத்திய இணை மந்திரி வி.கே.சிங் கலந்து கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பு கூட்டத்திற்கு பா.ஜ.க. பெரம்பலூர் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், செயலாளர் வரதராஜன், இணை பொருளாளர் சிவசுப்ரமணியம் ஆகியோர் முன்னிைல வகித்தனர். மாவட்ட துணை தலைவர் சேகர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பேசுகையில், விவசாயிகளின் ஆதரவு பா.ஜ.க.வுக்கு அதிகரித்து வருவதை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் பல்வேறு தவறான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனை நீங்கள் நம்பக்கூடாது, என்றார். முன்னதாக அவர் விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களின் நன்மைகளை எடுத்து கூறி, அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். முடிவில் வேப்பூர் தெற்கு ஒன்றிய தலைவர் தியாகராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story