மாமல்லபுரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திரண்டனர்; ஆன்லைன் டிக்கெட் குளறுபடியால் அவதி


மாமல்லபுரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திரண்டனர்; ஆன்லைன் டிக்கெட் குளறுபடியால் அவதி
x
தினத்தந்தி 20 Dec 2020 5:38 AM IST (Updated: 20 Dec 2020 5:38 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் ஆன்லைன் டிக்கெட் குளறுபடியால் இணையதள வசதி சரியாக இயங்காததால் நுழைவு சீட்டு பெறமுடியாமல் சுற்றுலா பயணிகள் அவதியுற்றனர்.

ஆன்லைன் சேவை
கொரோனா தொற்று காரணமாக உலக புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், ஐந்துரதம் உள்ளிட்ட பாரம்பரிய புராதன சின்னங்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் 8 மாதங்களாக மூடப்பட்டு நிலையில் மத்திய, மாநில அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி திறக்கப்பட்டன. ஆன்லைன் சேவை மூலம் பணம் செலுத்தி பதிவு செய்து ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்ற அறிவிப்புடன் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா தொற்று ஊரடங்குக்கு பிறகு வார விடுமுறை தினமான முதல் சனிக்கிழமையான நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் திரண்டதால் கடற்கரை கோவில், ஐந்துரதம், வெண்ணை உருண்டைக்கல் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்கள் களை கட்டியது.

குறிப்பாக நேற்று காலை 8 மணி முதல் 12 மணி வரை பயணிகள் பலர் கடற்கரை கோவில், ஐந்துரதம் பகுதியின் நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்படடிருந்த தொல்லியல் துறையின் கியூ-ஆர் ஸ்கேன் பார் கோடு பலகையில் தங்கள் செல்போன் மூலம்அதில் உள்ள தொல்லியல் துறையின் குறியீட்டு இணையதள கியூ-ஆர் பார் கோடினை ஸ்கேன் செய்து தொல்லியல் துறை கணக்கில் நபர் ஒருவருக்கு ரூ.40 ரூபாய் கட்டணம் செலுத்தி, தங்கள் செல்போனில் பதிவாகியிருந்த பார்வையாளர் நுழைவு டிக்கெட்டினை புராதன சின்னங்களின் நுழைவு வாயிலில் காண்பித்து சுற்றி பார்த்துவிட்டு 
சென்றனர்.

2 ஆயிரம் டிக்கெட்டுகள்
இணைய தள சேவை சரியாக இயங்காததால் நுழைவு சீட்டு பதிவு செய்ய முடியாமல் பல பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து ஏமாற்றத்துடன் புராதன சின்னங்களை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

மேலும் நேற்று காலை 12 மணியுடன் 2 ஆயிரம் டிக்கெட்டுகளும் சுற்றுலா பயணிகள் மூலம் பதிவு செய்யப்பட்டதால், நுழைவு சீட்டு தீர்ந்துவிட்டது என அறிவிப்பு காட்டிய நிலையில் தொல்லியல் துறை ஆன்லைன் டிக்கெட் சேவை முடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் பலர் புராதன சின்னங்களில் உள்ள கட்டண கவுண்டர்களில் 1 மணி நேரம் வரை கணினி மூலம் வழங்கப்படும் நுழைவு சீட்டு பெற காத்திருந்தனர்.

சுற்றுலா பயணிகளின் சிரமத்தை உணர்ந்த மாமல்லபுரம் தொல்லியல் துறை நிர்வாகம் டெல்லியில் உள்ள மத்திய தொல்லியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களில் காத்திருக்கும் பயணிகளுக்கு அங்குள்ள கட்டண மையங்களில் பணம் பெற்றுகொண்டு கணினி மூலம் நுழைவு சீட்டு வழங்க அனுமதி வாங்கியது. அதன் பிறகு பல மணி நேரம் காத்திருந்த பயணிகள் கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெற்று புராதன சின்னங்களை கண்டுகளித்து விட்டு சென்றனர். மேலும் நேற்று நீண்ட நாளைக்கு பிறகு சிறப்பு விமானத்தில் மும்பை வந்த இங்கிலாந்து நாட்டு பயணிகள் பலரும் மாமல்லபுரம் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்து அதன் முன்பு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Next Story