மாவட்டத்தில் சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற 738 பேர் விண்ணப்பம் இன்று கடைசி நாள்


மாவட்டத்தில் சர்க்கரை ரேஷன் கார்டுதாரர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற 738 பேர் விண்ணப்பம் இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 20 Dec 2020 5:47 AM IST (Updated: 20 Dec 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை ரேஷன்கார்டுதாரர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற புதுக்கோட்டை மாவட்டத்தில் 738 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

புதுக்கோட்டை,  

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் சர்க்கரை குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் அவர்களது குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்வதற்கு வருகிற 20-ந்் தேதிக்குள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அவகாசம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.

இந்த நிலையில் பொங்கல் பரிசாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 2, 500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுமென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு நேர மற்றும் பகுதி நேர, நடமாடும் ரேஷன் கடைகள் என மொத்தம் ஆயிரத்து 124 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகள்4 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வைத்துள்ளனர்.

738 பேர் விண்ணப்பம்

மாவட்டத்தில் பொதுவினியோக திட்டத்தில் நடைமுறையில் உள்ள 2, 300 சர்க்கரை அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்பங்களை www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலோ அல்லது சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் புதுக்கோட்டை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரிடமோ சமர்ப்பிக்கலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடன் பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த 7-ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் சர்க்கரை குடும்ப அட்டைகளை வைத்துள்ளவர்களில் 738 பேர் அரிசி அட்டைகளாக மாற்றி உள்ளதாக பொது வினியோக வட்டாரத்தில் தெரிவித்தனர்.

ஆர்வம்

முதல்-அமைச்சரின் பொங்கல் பரிசு அறிவிப்பு வெளியான நிலையில் சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்துள்ளவர்கள் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்ற ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் என்பதால் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story