ஜாவித் அக்தரின் புகார் மீது நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக விசாரணை போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு
ஜாவித் அக்தரின் புகாரின்பேரில் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிராக விசாரணை நடத்த போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
பழம்பெரும் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் மும்பை அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கடந்த மாதம் பிரபல நடிகை கங்கனா ரணாவத்திற்கு எதிராக அவதூறு கிரிமினல் புகார் ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
அந்த புகாரில் அவர், நடிகை கங்கனா ரணாவத் டி.வி. பேட்டிகளில் தன்னை பற்றி அவதூறாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் நடிகை கங்கனா ரணாவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு இருந்தார்.
மேலும் இந்த புகார் தொடர்பான விசாரணையில் போது ஜாவித் அக்தர் தரப்பில் ஆஜரான வக்கீல், “ ஜாவித் அக்தர் கடந்த 55 ஆண்டுகளாக தனக்கு என நல்ல பெயரை உருவாக்கி வைத்து உள்ளார். தேசிய டி.வி. சேனல் மற்றும் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிராக கங்கனா ரணாவத் ஆதாரமற்ற கருத்துகளை கூறி அவரது நற்பெயருக்கு களங் கத்தை ஏற்படுத்தி உள்ளார்” என குற்றம்சாட்டினார்.
மேலும் வழக்கு விசாரணையின் போது ஜாவித் அக்தரும் நேரடியாக கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.
இந்தநிலையில் ஜாவித் அக்தரின் புகாரை விசாரித்த கோர்ட்டு, அவரது புகார் மீது கங்கனா ரணாவத்துக்கு எதிராக விசாரணை நடத்த ஜூகு போலீசாருக்கு உத்தரவிட்டது.
மேலும் விசாரணை அறிக்கையை ஜனவரி 16-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யவும் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
Related Tags :
Next Story