மும்பை காங்கிரஸ் புதிய தலைவராக பாய் ஜக்தாப் நியமனம் தமிழர்களான கணேஷ்குமார், ரவிராஜாவுக்கும் பதவி


மும்பை காங்கிரஸ் புதிய தலைவராக பாய் ஜக்தாப் நியமனம் தமிழர்களான கணேஷ்குமார், ரவிராஜாவுக்கும் பதவி
x
தினத்தந்தி 20 Dec 2020 6:04 AM IST (Updated: 20 Dec 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

மும்பை காங்கிரஸ் புதிய தலைவராக பாய் ஜக்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர்களான கணேஷ்குமார், ரவிராஜாவுக்கும் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

மும்பை,

மும்பை காங்கிரஸ் தலைவராக இருந்த மிலிந்த் தியோரா நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஏக்நாத் கெய்வாட் தலைவராக நியமிக்கப்பட்டார். 2022-ல் நடைபெற உள்ள மாநகராட்சி தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தும் வகையில் மும்பை காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்க கட்சி மேலிடம் தீவிரம் காட்டி வந்தது.

இந்தநிலையில் மும்பை காங்கிரஸ் புதிய தலைவராக பாய் ஜக்தாப் என்ற அசோக் அர்ஜூன்ராவ் ஜக்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் செயல் தலைவராக சரன்சிங் சப்ரே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அதில் அவர் முன்னாள் தலைவர் ஏக்நாத் கெய்க்வாட்டின் பணிகளையும் பாராட்டி உள்ளார்.

இதேபோல மும்பை காங்கிரசுக்கு பல்வேறு கமிட்டிகள் அமைக்கப்பட்டு அதன் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருங்கிணைப்பு கமிட்டியின் தலைவராக அமர்ஜித் சிங் மன்காசும், தேர்தல் அறிக்கை, வெளியிடும் கமிட்டியின் தலைவராக சுரேஷ் செட்டியும், மும்பை காங்கிரஸ் பொறுப்பாளாராக சந்திரகாந்த் கந்தோரேவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வியூக அமைத்தல் கமிட்டியின் தலைவராக மாநில காங்கிரஸ் தலைவர் இருப்பார். இந்த கமிட்டியின் செயலாளராக தமிழர் கணேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தமிழரான மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ரவிராஜா, முன்னாள் எம்.பி. பிரியா தத் உள்ளிட்டவர்கள் வியூக கமிட்டியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story