திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் சாமி தரிசனம் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு


திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் சாமி தரிசனம் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு
x

சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, திருநள்ளாறு சனிபகவான் கோவிலில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்கள் நீண்ட வரிசையில் நின்று நேற்று சாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால், 

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருவது சிறப்புக்குரியது.. இக்கோவிலில், சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கிலும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோவிலில், வாக்கியப்பஞ்சாங்கப்படி இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனிபெயர்ச்சி விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வரும் 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிபெயர்ச்சி என்கிறோம்.

இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று (சனிக்கிழமை) முதல், ஜனவரி 31-ந்தேதி வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமை தோறும் சனிபகவானை தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று அதிகாலை 3.30 மணி முதல் பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, ஆன்லைனில் முன்பதிவு செய்து, கோவிலுக்கு வந்த பக்தர்கள் கைகளில், காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், கிருமி நாசினி தெளித்தனர். அவர்களை தொடர்ந்து, மாவட்ட நலவழித்துறை ஊழியர்கள், பக்தர்களை வெப்பமானியை கொண்டு சோதித்து தரிசனத்திற்கு அனுப்பி வைத்தனர்.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, துணை கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான ஆதர்ஷ், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட், துணை கலெக்டர் பாஸ்கரன் ஆகியோர், கொரோனா விதிமுறைப்படி, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் முறையை ஆய்வு செய்து, எளிமையான தரிசனத்திற்கு உதவி புரிந்தனர். நளன் குளம் மற்றும் பிற தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக, மாவட்ட நல வழித்துறை ஊழியர்கள், தொழில்நுட்ப அதிகாரி சேகர் தலைமையில், சனிபகவான் கோவில் முழுவதும் கிருமிநாசினி மற்றும் புகை மருந்து அடித்து சீர்படுத்தினர். நேற்று அதிகாலை முதல் இரவு வரை சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

ஆய்வுப் பணியைத் தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட கலெக்டரும், திருநள்ளாறு சனி பகவான் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜூன் சர்மா கூறியதாவது:-

வரும் 27-ந் தேதி 5:22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இன்று முதல் வருகிற ஜனவரி மாதம் இறுதிவரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும், பகவான் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம். (ஆன்லைன் முகவரி-www.thirunallarutemple.org) முன் பதிவு செய்யாத யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல், முககவசம், சமூக இடைவெளி மிக அவசியம். சனி பெயர்ச்சி நாள் மட்டும் அல்லாது அன்றைய தேதியில் இருந்து, ஒரு மண்டலத்துக்கு அதாவது 48 நாட்கள் இக்கோவிலில் சனி பகவானை தரிசனம் செய்யலாம். அந்த தரிசனம் சனி பெயர்ச்சி அன்று கிடைக்கும் பலனை பெற்றுத்தரும். ஆனால் சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது. முக்கியமாக, 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள், தரிசனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story