வாகன ஓட்டிகளை வதைக்கும் வத்தலக்குண்டு சாலை விரிவாக்க பணிகள் வேகமெடுக்குமா?
வத்தலக்குண்டு சாலையில் விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல்,
தென்மாவட்டங்களின் நுழைவு வாயிலாக திண்டுக்கல் திகழ்கிறது. இதுதவிர கேரள மாநிலத்துக்கும் திண்டுக்கல் வழியாக செல்லலாம். இதனால் திண்டுக்கல் வாகன போக்குவரத்து மிகுந்த மாவட்டமாக உள்ளது. இதில் கேரளா, தேனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வாகனங்கள் திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலை வழியாக செல்கின்றன.
எனவே, திண்டுக்கல் பேகம்பூர் முதல் வத்தலக்குண்டு வரையிலான சாலையில் 24 மணி நேரமும் பஸ்கள், வாகனங்கள் சென்றபடி இருக்கும். இதை கருத்தில் கொண்டு பேகம்பூர் சிக்னல் முதல் புறவழிச்சாலை வரையிலான வத்தலக்குண்டு சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடக்கிறது. இதற்காக வத்தலக்குண்டு சாலையில் பேகம்பூர், யூசிபியாநகர், குடைப்பாறைபட்டி ஆகிய பகுதிகளில் 5 சிறு பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது.
அதில் ஒரு பாலம் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அதுவும் சாலையை விட 1½ அடி உயரத்தில் உள்ளது. ஆனால், மீதமுள்ள 4 பாலங்களும் பாதி அளவு தான் கட்டப்பட்டுள்ளன. மீதமுள்ள பாதி அளவு பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருக்கிறது. அதில் பாலம் கட்டுவதற்கு முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
அதற்குள் சாலையின் பிற பகுதியை அகலப்படுத்தும் வகையில் இருபக்கமும் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதிலும் ஓரிடத்தில் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதில் குப்பைகளும் குவிந்து கிடக்கின்றன. இதனால் வாகனங்கள் இயல்பாக சென்று வரமுடியவில்லை. வாகன போக்குவரத்து மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் பாலம் கட்டுவதற்கு பள்ளம் தோண்டிய பகுதி, சாலையை அகலப்படுத்துவதற்கு பள்ளம் தோண்டிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. அதிலும் ஒருசில இடங்களில் எச்சரிக்கை பலகைகள் கூட இல்லை. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் நிலை உள்ளது. ஒட்டுமொத்தமாக வத்தலக்குண்டு சாலை வாகன ஓட்டிகளை வதைத்து வருகிறது. இதை மாற்றுவதற்கு சாலை விரிவாக்க பணிகளை திட்டமிட்டு வேகமாக முடிக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story