அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தால் வெற்றி நிச்சயம் விஜிலா சத்யானந்த் எம்.பி.பேச்சு
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தால் வெற்றி நிச்சயம் என ஆரல்வாய்மொழியில் விஜிலா சத்யானந்த் எம்.பி. பேசினார்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி பேரூராட்சி அ.தி.மு.க. மகளிர் வாக்குச்சாவடி குழு கூட்டம் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலாளர் எப்சிபாய், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பார்வதி, யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வாழ்த்தி பேசினார். சிறப்பு விருந்தினராக எம்.பி.யும் மாநில மகளிர் அணி செயலாளருமான விஜிலா சத்யானந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் மக்களுக்கு நன்மை செய்து வருகிறார். ஜெயலலிதாவின் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. நாம் தினமும் மக்களை சந்தித்து ஜெயலலிதாவின் மற்றும் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்தால் வெற்றி நிச்சயம்.
ரூ.2,500 பொங்கல் பரிசு
நமது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு சகோதரராக தாய் வீட்டு சீதனமாக 2 கோடியே 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ. 2,500 வழங்க உத்தரவிட்டுள்ளார். எந்த லட்சியத்திற்காக எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. என்னும் இயக்கத்தை தோற்றுவித்தாரோ அந்த லட்சியத்தை ஜெயலலிதா காப்பாற்றினார். அதன் வழியில் இன்று எடப்பாடி பழனிசாமி அந்த லட்சியத்தை நிறைவேற்றி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமே பெண்கள் நிம்மதியாக வாழ முடியும்.
இன்னும் நூறு ஆண்டுக்கு மேலாக அ.தி.மு.க. இயக்கமும் ஆட்சியும் நிலைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரன், மாவட்ட இணைச்செயலாளர் லதா ராமச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் தென்கரை மகாராஜன், ஒன்றிய பேரவை செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.சி.யூ. மணி, ஒன்றிய துணைச் செயலாளர் ரோகிணி அய்யப்பன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் மாடசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story