கூடலூரில், காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை


கூடலூரில், காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2020 3:02 PM IST (Updated: 20 Dec 2020 3:02 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் காயத்துடன் சுற்றித்திரியும் காட்டுயானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் நகரில் கடந்த 2 ஆண்டுகளாக காயத்துடன் ஆண் காட்டுயானை ஒன்று சுற்றித்திரிகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த காட்டுயானைக்கு காயத்தை குணப்படுத்த பழங்களுக்குள் மாத்திரைகளை மறைத்து வைத்து வனத்துறையினர் கொடுத்தனர். பின்னர் காயம் குணமடைய தொடங்கியது. ஆனால் காட்டுயானை இடம்பெயர்ந்து சென்றதால், வனத்துறையினரால் தொடர் சிகிச்சை அளிக்க முடியவில்லை. இதனால் காயத்துடன் காட்டு யானை அவதிப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பந்தலூரில் 3 பேரை கொன்ற காட்டுயானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோவை, முதுமலை, ஓசூர் வன கால்நடை டாக்டர்கள் மனோகரன், சுகுமாரன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட குழுவினர் வந்து உள்ளனர். எனவே காயத்துடன் சுற்றித்திரியும் அந்த காட்டுயானையையும் பிடித்து, சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர். அதன்படி நேற்று காலை செம்பாலா, விசாலாட்சி பகுதியில் தனியார் எஸ்டேட்டில் புதர்களுக்கு இடையே மறைந்திருந்த அந்த காட்டுயானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது கூடலூர் வன அலுவலர் சுமேஷ் சோமன், வனச்சரகர் ராமகிருஷ்ணன் உடனிருந்தனர்.

இதற்கிடையில் அந்த காட்டுயானை திடீரென வனத்துறையினரை நோக்கி ஓடி வந்தது. உடனே வனத்துறையினர் விலகி ஓடி தப்பினர். தொடர்ந்து அந்த காட்டுயானையை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறும்போது, அந்த காட்டுயானையை மயக்க ஊசி அல்லது கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்க ஆலோசித்து வருகிறோம் என்றனர்.

Next Story