திருக்கோவிலூர் அருகே, காட்டுப்பையூர் பெரிய ஏரி கரையில் நீர் கசிவு - உடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார்
காட்டுப்பையூர் பெரிய ஏரி கரையில் நீர் கசிவு ஏற்படுவதால் ஏரி உடையும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரை அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. சுமார் 246 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரி கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இந்த ஏரி மூலம் இப்பகுதியிலுள்ள சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த நிலையில் ஏரியில் மதகு அமைந்துள்ள பகுதியில் கரையோரம் நேற்று முன்தினம் நீர் கசிவு ஏற்பட்டது. இதை கவனித்த விவசாயி ஒருவர் உடனடியாக கிராமத்துக்கு சென்று பொதுமக்களிடம் தகவலை தெரிவித்தார். இதையடுத்து ஏரிக்கு திரண்டு வந்த கிராமமக்கள் நீர் கசிவு ஏற்பட்ட இடத்தில் மண்ணை கொட்டி கசிவை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் தொடர்ந்து தண்ணீர் கசிந்து கொண்டே இருந்ததால் ஏரியின் கரை உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.
பின்னர் இதுபற்றி உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நீர் கசிவை தடுத்து நிறுத்த அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து ஏரியின் கரையை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு நீர் கசிவை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீர் கசிவை தடுத்து நிறுத்தாத பட்சத்தில் கரையில் உடைப்பு ஏற்பட்டால் காட்டுப்பையூர் மற்றும் அதை சுற்றியுள்ள எல்றம்பட்டு, கொடியூர், அத்தன்ட மருதூர், ஆவி கொளப்பாக்கம், வட மருதூர் மற்றும் முதலூர் உள்ளிட்ட 7 கிராமங்களில் பயிரிடப் பட்டிருக்கும் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும், எனவே பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனே காட்டு பையூர் கிராமத்திற்கு விரைந்து வந்து நீர் கசிவு ஏற்பட்டுள்ள கரைப்பகுதியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story