தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் நிரம்பி வழியும் அணைக்கட்டுகள் - விவசாயிகள் மகிழ்ச்சி


தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் நிரம்பி வழியும் அணைக்கட்டுகள் - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 20 Dec 2020 4:55 PM IST (Updated: 20 Dec 2020 4:55 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணைக்கட்டுகள் நிரம்பி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதால் விவசாயிகள், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம்,

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு கிழக்கே நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணையாறு, பம்பை ஆறு, சங்கராபரணி ஆறு, வராக நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் வறண்டு காணப்பட்ட தென்பெண்ணையாறு, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை எதிர்நோக்கியே இருந்தது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால் 8 ஆண்டுகளுக்கு பிறகு தென்பெண்ணையாற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இவ்வாறு தென்பெண்ணையாற்றுக்கு வரும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு ஏதுவாக விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரத்திலும், தளவானூரிலும் அணைக்கட்டுகள் உள்ளன. தற்போது தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் எல்லீஸ்சத்திரம், தளவானூர் ஆகிய அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன.

இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கள்ளிப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள 12 கிராமங்களுக்கும் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும். இந்த தடுப்பணையில் தண்ணீரை தேக்குவதன் மூலம் எனதிரிமங்கலத்தில் உள்ள வாலாஜா வாய்க்கால் மூலம் பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளான கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை, புலவனூர், கரும்பூர், கொரத்தி, மேல்குமாரமங்கலம், எல்.என்.புரம், திருத்துறையூர், பூண்டி, பூங்குணம், பண்டரக்கோட்டை, கோட்லாம்பாக்கம் உள்ளிட்ட 14 ஏரிகள் நிரம்பி அதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் 2 மாவட்ட விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் 2 மாவட்டங்களில் உள்ள கிராம மக்களும், தளவானூர் தடுப்பணைக்கு சென்று வெள்ளநீர் இருகரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து ஓடுவதை மகிழ்ச்சியுடன் பார்த்து செல்வதுடன் இளைஞர்கள் அதில் குளித்து மகிழ்கின்றனர்.

அதேபோல் விழுப்புரம் எல்லீஸ்சத்திரத்தில் உள்ள தென்பெண்ணையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் அங்குள்ள அணைக்கட்டு நிரம்பி அதன் 7 ஷட்டர்கள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அங்கிருந்து ஆழாங்கால் வாய்க்கால் வழியாக சீறிப்பாய்ந்து செல்கிறது.

மேலும் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள், அங்குள்ள அணைக்கட்டுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர். அதேநேரத்தில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் சிறுவர்கள், இளைஞர்கள் ஆனந்தமாக குளித்து வருகின்றனர்.

Next Story