ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாணவனை தேடும் பணியை துரிதப்படுத்த கூடுதலாக மீட்பு குழுவை நியமிக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் - விக்கிரவாண்டி அருகே பரபரப்பு
விக்கிரவாண்டி அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாணவனை தேடும் பணியை துரிதப்படுத்த கூடுதலாக மீட்பு குழுவை நியமிக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி அருகே தொரவி கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை வராக நதியில் குளிக்கச்சென்ற பிளஸ்-2 மாணவர் தமிழ்வேந்தன் (வயது 18) வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டான். உடனே விழுப்புரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக தீயணைப்பு துறையினர் வராக நதியில் படகு மூலம் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வெகு நேரம் தேடியும் மாணவன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் மாணவனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 150-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மெயின்ரோட்டுக்கு திரண்டு சென்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவனை தேட கூடுதலாக மீட்பு குழுவினரை நியமிக்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக முண்டியம்பாக்கம்- திருக்கனூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ஆம்ஸ்ட்ராங், வருவாய் ஆய்வாளர் குமரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெனிபர் ஆகியோர் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக மீட்புக்குழு நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அவர்கள் வந்து மாணவரை தேடும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர். அதன் பின்னர் மாணவனின் உறவினர்கள், பொதுமக்கள் சமாதானம் அடைந்து 12.50 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. முன்னதாக போராட்டத்தின்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்சிற்கு பொதுமக்கள் வழிவிட்டு பின்னர் போராட்டத்தை தொடர்ந்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர், மீன்வளத்துறையிலிருந்து 7 பேர் கொண்ட குழுவினர் படகுடன் வந்து மாணவன் தமிழ்வேந்தனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story