நாளை மற்றும் நாளை மறுநாள் விழுப்புரம், கடலூரில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்


நாளை மற்றும் நாளை மறுநாள் விழுப்புரம், கடலூரில் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்
x
தினத்தந்தி 20 Dec 2020 5:09 PM IST (Updated: 20 Dec 2020 5:09 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

செஞ்சி,

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. அந்த வரிசையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற முழக்கத்துடன் தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் கடந்த 13-ந் தேதி தொடங்கினார். மதுரையை தொடர்ந்து தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கடந்த 16-ந் தேதியுடன் தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தார்.

இதையடுத்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். அதன்படி விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதாவது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கூட்டுரோட்டில் நாளை (திங்கட்கிழமை) மதியம் 12.30 மணிக்கு தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மாளிகையில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

பின்னர் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு கண்டாச்சிபுரம் கூட்டுரோட்டிலும், 11 மணிக்கு விழுப்புரம் யோகலட்சுமி மஹாலிலும் பொதுமக்கள் மத்தியில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதையடுத்து மதியம் 2.30 மணிக்கு கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி மக்களிடையே உரையாற்றுகிறார். தொடர்ந்து மதியம் 3 மணிக்கு கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் கடலூர் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு மீண்டும் விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு ஓட்டல் கிராண்ட் செரினாவிலும், மாலை 6 மணிக்கு திண்டிவனம் ஐஸ்வர்யா பவனிலும் உரையாற்றுகிறார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் ஸ்ரீபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story