உளுந்தூர்பேட்டை அருகே, செல்போன் டவர் அமைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.4 லட்சம் மோசடி - சென்னை வாலிபர்கள் 3 பேர் கைது


உளுந்தூர்பேட்டை அருகே, செல்போன் டவர் அமைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.4 லட்சம் மோசடி - சென்னை வாலிபர்கள் 3 பேர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2020 5:33 PM IST (Updated: 20 Dec 2020 11:11 PM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே செல்போன் டவர் அமைப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த சென்னை வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வாணியன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிதரன்(வயது 51). விவசாயி. சம்பவத்தன்று துளசிதரன் வீட்டில் இருந்தபோது அவரது வீட்டிற்கு வந்த சென்னையைச் சேர்ந்த 3 வாலிபர்கள் தாங்கள் தனியார் செல்போன் நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், உங்களது நிலத்தில் செல்போன் டவர் அமைக்க உள்ளதாகவும் இதற்கு ஒரு கணிசமான தொகையை நீங்கள் முன்பணமாக செலுத்த வேண்டும் எனவும் கூறினர்.

இதை உண்மை என்று நம்பிய துளசிதரன் 3 வாலிபர்களிடமும் தவணை முறையில் மொத்தம் ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுத்தார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட 3 வாலிபர்களும் துளசிதரனுடனான தொடர்பை துண்டித்துக்கொண்டனர். அவர்களை துளசிதரன் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதன் பிறகே அவர்கள் தன்னை மோசடி செய்துவிட்டதை துளசிதரன் அறிந்தார்.

இதனால் செய்வதறியாமல் தவித்த துளசிதரன் இது குறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், 3 வாலிபர்களுக்கு துளசிதரன் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பிய விவரத்தை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் ரோகித் கரன்(31), திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அரவிந்த் சாமி(28) மற்றும் சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த விஜயகாந்த் மகன் பார்த்தசாரதி(25) என தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 3 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் செல்போன் அமைப்பதற்கு துளசிதரனிடம் ஆசைக்காட்டி பணம் மோசடி செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் டவர் அமைப்பதற்கு விவசாயியிடம் நூதன முறையில் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் திருநாவலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story