மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி - நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர்,
நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்தது. குறிப்பாக கடலூர்- சித்தூர் சாலை, அருங்குணம் சாலை, கடலூர்-திருக்கோவிலூர்-சங்கராபுரம் சாலை ஆகிய சாலைகள் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை சென்னை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சாந்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் மழைவெள்ளத்தால் சேதமடைந்த கடற்கரை சாலை, ஆலப்பாக்கம் பாலத்தின் அருகில் அணுகுசாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து சிதம்பரம் வண்டிகேட்டில் நிரந்தர வெள்ள சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டும் பணியையும், புத்தூர் சாலையில் தொரப்பாடி என்ற இடத்தில் சாலையில் ஏற்பட்ட மண்சரிவை சரிசெய்யும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, ஊழியர்களிடம் விரைந்து பணிகளை முடிக்கும்படி அறிவுறுத்தினார். பின்னர் வீராணம் ஏரிக்கரை சாலை, குமாரக்குடி-நாச்சியார்பேட்டை சாலை, சோழத்தரம்-ஸ்ரீமுஷ்ணம் சாலை மற்றும் விருத்தாசலம்-காட்டுக்கூடலூர் சாலையின் தரத்தை ஆய்வு செய்ததோடு, விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் நடைபெற்ற தற்காலிக சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், கோட்ட பொறியாளர் சிவசேனா மற்றும் உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story