கண்களில் மிளகாய் பொடி தூவி வியாபாரி குத்திக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
சூளகிரியில் கண்களில் மிளகாய் பொடி தூவி வியாபாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் மாரண்டப்பள்ளி ஊராட்சி தொட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா (வயது 55). புதினா வியாபாரி. இவருக்கு வள்ளியம்மா (45) என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். ராஜப்பா, வியாபாரத்திற்காக தினமும் காலையில் வெளியே செல்வது வழக்கம்.
அதேபோல், நேற்று காலை 8.30 மணி அளவில், ராஜப்பா மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார். வழியில், சூளகிரி-கும்பளம் சாலையில் சென்ற போது, மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் ராஜப்பாவை வழிமறித்து, கண்களில் மிளகாய் பொடியை தூவினர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜப்பாவை, அந்த நபர்கள், ஓட,ஓட விரட்டி சென்று கத்தியால் சரமாரியாக குத்தினர்.
இதில் ராஜப்பா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக சென்றவர்கள் சூளகிரி ேபாலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி மற்றும் சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு, சென்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கிருஷ்ணகிரியில் இருந்து மோப்பநாய் பைரவி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு திரும்பி வந்து விட்டது. இந்த கொலை தொடர்பாக சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். சூளகிரியில், பட்டப்பகலில் புதினா வியாபாரி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத்தகராறு காரணமாக ராஜப்பா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர்.
இந்தநிலையில் புதினா வியாபாரி ராஜப்பாவின் குடும்பத்தினர், உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் அப்போதுதான் உடலை பெற்றுக் கொள்வோம் என்று கூறி, தொட்டூர் சர்க்கிளில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story