கஞ்சா கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாமக்கல் வழியாக கஞ்சா கடத்தப்பட்ட வழக்கில் கைதான மேலும் ஒருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
நாமக்கல்,
ஆந்திராவில் இருந்து கரூருக்கு லாரியில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ந் தேதி நாமக்கல் போலீசார் 210 கிலோ கஞ்சா பொட்டலங்கள், ரூ.2 லட்சத்து 490 மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக லாரியை ஓட்டி வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ண பெருமாள் (வயது 42) மற்றும் உத்தமபாளையத்தை சேர்ந்த குமார்(43), திண்டுக்கல் மாவட்டம் போச்சநாய்க்கன்பட்டியை சேர்ந்த பாலையா (43) ஆகிய 3 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
இவர்களில் பாலையா கஞ்சா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்து கொண்டு லாரிகளில் கஞ்சா பொட்டலங்களை ஏற்றி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் மெகராஜ், பாலையாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான நகலை நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாலையாவிடம் நேற்று வழங்கினார்.
இந்த வழக்கில் கைதான கிருஷ்ண பெருமாள், குமார் ஆகியோர் மீதும் நேற்று முன்தினம் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story