ஆத்தூரில், கல்வி அலுவலக உதவியாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஆத்தூரில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவரின் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆத்தூர்,
ஆத்தூர் தெற்கு காடு அண்ணாநகர் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் அருகே வசிப்பவர் காந்திமதி (வயது 45). இவர் ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றார். பின்னர் வீடு திரும்பிய அவர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மற்றும் 2½ பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல இவரது வீட்டின் அருகில் வசிப்பவர் அறிவழகன் (55). இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மாமனாருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அதே பகுதியில் வசிக்கும் தனது மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.
நேற்று காலை வீடு திரும்பிய போது அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் அறிவழகன் சென்று பார்த்தபோது, எந்த பொருளும் திருட்டு போக வில்லை. ஆனால் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் பொருட்களை களைத்து போட்டு விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து காந்திமதி மற்றும் அறிவழகன் ஆகியோர் ஆத்தூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஆத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story