‘மக்கள் எப்படி க‌‌ஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும்’ ‘பொங்கல் பரிசு அறிவிப்பை சுயநலம் என்று கூறுவதா?’ - மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்


‘மக்கள் எப்படி க‌‌ஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்கு தெரியும்’ ‘பொங்கல் பரிசு அறிவிப்பை சுயநலம் என்று கூறுவதா?’ - மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
x
தினத்தந்தி 20 Dec 2020 9:42 PM IST (Updated: 20 Dec 2020 9:42 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் எப்படி க‌‌ஷ்டப்படுகிறார்கள் என்பது தனக்கு தெரியும் என்றும், பொங்கல் பரிசு அறிவிப்பை சுயநலம் என்று கூறுவதா என்றும் மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார்.

சேலம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் எட்டிக்குட்டை மேட்டில் தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பரிசு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வைத்த விமர்சனத்துக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரை மக்கள் சுபிட்சமாக வாழவேண்டும். மக்களுக்கு குறிப்பறிந்து சேவை செய்ய வேண்டும். காலத்திற்கேற்றவாறு மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும். அதுதான் அரசின் கடமை. அதை நாங்கள் செவ்வனே செய்துவருகிறோம். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஊடகத்திலும், டுவிட்டரிலும் பொங்கல் பரிசு அறிவித்தது சுயநலமென்று போட்டிருக்கிறார். இது என்ன சுயநலமா? போன வருடம் ரூ.1,000 கொடுத்தோம், அன்று நன்றாக இருந்தோம். இப்போது கொரோனாவாலும், புயல், கனமழையாலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் கொடுப்பது தவறா?

ஏழை மக்களுக்கு கொடுப்பதை யார் தடுத்து நிறுத்துகிறார்களோ அவர்கள் என்றைக்கும் வென்ற சரித்திரம் கிடையாது. நாங்கள் ஏழை மக்களை பார்க்கிறோம், ஏழை மக்களின் எண்ணம் நிறைவேற வேண்டும், அதற்காக இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறோம். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமத்தில் இருந்து நகரம் வரை ஏழை மக்களோடு பழகியிருக்கிறேன். ஆகவே, ஒரு பண்டிகை வரும்போது அவர்கள் எப்படி க‌‌ஷ்டப்படுவார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதுவும், கொரோனா காலத்தில் மக்கள் பட்ட துன்பம் அதிகம். புயல், கனமழையால் ஏற்பட்ட துன்பம் அதைவிட கடினம். நான் நேரடியாக டெல்டா மாவட்டத்துக்கு சென்று பார்வையிட்டு வந்தேன்.

தை திருநாள்தான் தமிழர்களுடைய பொன்னான நாள். தைப்பொங்கல் எல்லா தமிழ் இல்லத்திலும் கொண்டாடப்படும். அப்படி சிறப்பாக கொண்டாடுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தை, சுயநலத்தோடு அறிவித்ததாக சொல்கின்றார்களே, இது நியாயம்தானா என்பதை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, ஏழை, எளிய மக்களில் இருந்து அனைத்து மக்களும் இன்புற்று வாழ வேண்டும். ஆகவே, யாரைப் பற்றியும் கவலைப்படப்போவதில்லை, மக்களைப் பற்றித்தான் நாங்கள் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

எதிர்க்கட்சி தலைவர் வேண்டுமென்றே எதை வேண்டுமானாலும் பேசுவார். இவர் என்ன சொன்னார்? மக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், நிதி கொடுக்க வேண்டுமென்று சொன்னாரா, இல்லையா? அறிவித்தவுடன், இப்போது மாற்றிப்பேசுகிறார். பச்சோந்திகூட கொஞ்சம் நேரம் கழித்துத்தான் நிறம் மாறும், ஆனால் இவர் அவ்வப்போது நிறம் மாறுகிறார். மக்கள் உ‌ஷாராக இருக்க வேண்டும், மிகப்பெரிய பித்தலாட்டம் செய்வார்கள்.

நாங்கள் இருக்கும்போது நீங்கள் எப்படி ஆட்சிக்கு வரமுடியும்? ஆட்சியில் இருப்பது நாங்கள். மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். கடந்த காலத்தில், தி.மு.க. ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார். எவ்வளவு பச்சைப் பொய்? நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் கொடுப்பார்களாம். சுடுகாட்டுக்கே நிலம் எடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம். எங்கேய்யா நிலம் எடுத்துக்கொடுத்தீர்கள்? கடைசி வரையிலும் நிலத்தை காட்டாமலே போய்விட்டார்.

மக்கள் நல்ல தீர்ப்பை தருவார்கள். உழைக்கின்றவர்கள் என்றைக்கும் வீண்போக மாட்டார்கள், உழைப்போர்தான் வெற்றி பெறுவார்கள். எங்களது இயக்கம் உழைத்துக்கொண்டிருக்கிறது, அரசாங்கம் உழைத்துக்கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் மக்களுடைய அரசாங்கம், அவர்களுக்காக அனைத்து நன்மைகளையும் செய்து கொடுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எடப்பாடியில் நடைபெற்ற அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் நகரசபை முன்னாள் தலைவர் கதிரேசன், நகர அ.தி.மு.க. செயலாளர் முருகன், அரசு அச்சக கூட்டுறவு சங்க தலைவர் கந்தசாமி, நிர்வாகிகள் நாராயணன், செங்கோடன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கொங்கணாபுரம் எட்டிகுட்டைமேடு பகுதியில் நடைபெற்ற விழாவில், ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், பேரூர் அ.தி.மு.க. செயலாளர் சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள ்பாலாஜி, ராஜ்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் முத்துசாமி, பிரேம்சந்தர், ஒன்றியக்குழு உறுப்பினர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் இருப்பாளியில் நடைபெற்ற அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மாதேஷ், துரை, ஒன்றியக்குழு தலைவர் குப்பம்மாள், மாவட்ட கவுன்சிலர் சம்பூர்ணம், ஊராட்சி மன்ற தலைவர்கள் அலமேலு கிருஷ்ணன், நாகராஜன், அசோகன், சேலம் ஆவின் தலைவர் ஜெயராமன், பூலாம்பட்டி முன்னாள் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பூலாம்பட்டி ஜெயலலிதா பேரவை செயலாளர் பாலு, இருப்பாளி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முருகன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story