எளம்பலூரில் சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


எளம்பலூரில் சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 Dec 2020 4:32 AM IST (Updated: 21 Dec 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

எளம்பலூரில் சுகாதார வளாகங்கள் சீரமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள், சிறுமிகள், மாற்றுத்திறனாளி பெண்களின் வசதிக்காக ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கடந்த 2010-11-ம் நிதியாண்டில் கட்டப்பட்டது. அந்த சுகாதார வளாகத்தில் பெண்களுக்கான கழிவறை, குளியலறை, மாற்றுத்திறனாளி பெண்களுக்கான கழிவறை ஆகியவை உள்ளன. இதனால் அந்த சுகாதார வளாகம் அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள், சிறுமிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

ஆனால் தற்போது அந்த சுகாதார வளாகம் எவ்வித பராமரிப்பின்றியும், தண்ணீர் வசதியின்றியும் காணப்படுகிறது. மேலும் கழிப்பறைகளின் கோப்பைகள் சேதமடைந்துள்ளன. கழிப்பறை, குளியலறையின் கதவுகள் சேதமடைந்து காணப்படுவதால், அந்த மகளிர் சுகாதார வளாகம் தற்போது பயன்பாடில்லாமல் காட்சியளிக்கிறது. இதனால் பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதேபோல் புறவழிச்சாலையில் இருந்து எளம்பலூருக்குள் வரும் சாலையோரத்தில் சுகாதார வளாகம் ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அந்த சுகாதார வளாகம் சரியாக பராமரிக்கப்படாததால், அதன் உள்ளே உள்ள மின்விளக்குகள் மற்றும் தண்ணீர் குழாய்கள் மற்றும் கதவு, ஜன்னல் ஆகியவை பழுதாகி சேதமடைந்துள்ளன. சுகாதார வளாகம் செல்லும் பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்து அடர்ந்த காடு போல் காட்சியளிக்கிறது.

எளம்பலூர், பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ.வின் சொந்த ஊர் ஆகும். அவரது ஊரிலேயே சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில்லாமல் இருப்பது வேதனைக்குரியது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எளம்பலூர் கிராமத்தில் 2 சுகாதார வளாகங்களை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Next Story