மைசூருவில், வாக்காளர்களுக்கு வழங்க கடத்திய 16 ஆயிரம் பீர் பாட்டில்கள் பறிமுதல் - போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியது
மைசூருவில், கிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வழங்க கடத்திய 16 ஆயிரம் பீர் பாட்டில்கள் போலீசாரின் வாகன சோதனையில் சிக்கியது.
மைசூரு,
கர்நாடகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மற்றும் வருகிற 27-ந் தேதி என 2 கட்டங்களாக கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் மைசூரு மாவட்டத்திலும் 2 கட்டங்களாக கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான முதல்கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. இன்று(திங்கட்கிழமை) ஓய்வு நாள் ஆகும். இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபானங்கள் போன்றவை வழங்கப்படுவதை தடுக்க போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதேபோல் நேற்று காலையில் மைசூரு புறநகர் போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட கலால் துறை போலீஸ் துணை கமிஷனர் மகாதேவி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை மடக்கி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 18 வாகனங்களில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் கடத்தப்பட்டு வந்ததும், அவற்றை வாக்காளர்களுக்கு வழங்க திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த 18 வாகனங்களில் கடத்தப்பட்டு வந்த ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 912 மதிப்பிலான 16,470 பீர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பீர் பாட்டில்களை கடத்த பயன்படுத்தப்பட்ட 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இதுதொடர்பாக அந்த 18 வாகனங்களின் டிரைவர்கள் மீது மைசூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி கலால் துறை போலீஸ் துணை கமிஷனர் மகாதேவி கூறுகையில், “தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் இதுவரை 165 இடங்களில் சோதனை நடத்தி மதுபான பாட்டில்களை கடத்தியவர்களை பிடித்துள்ளோம். அதுதொடர்பாக 102 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது“ என்று கூறினார்.
Related Tags :
Next Story