திவான்காவ்ட்டி-கேட் இடையே ரெயில் என்ஜின் தடம்புரண்டு விபத்து 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக இயக்கம்
திவான் காவ்ட்டி-கேட் ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாள பராமரிப்பு பணி செய்யும் ரெயில் என்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அந்த வழித்தடத்தில் செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் காலதாமதமாக இயக்கப்பட்டது.
மும்பை,
மராட்டிய மாநிலம் ரோகாவில் இருந்து மங்களூரு வரையில் கொங்கன் ரெயில்வே வழித்தடம் அமைந்து உள்ளது. இந்த வழித்தடத்தில் ரத்னகிரி அருகே உள்ள திவான்காவ்ட்டி-கேட் ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தின் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரெயில் என்ஜின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது. நேற்று அதிகாலை 6.57 மணி அளவில் அந்த ரெயிலின் என்ஜின் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. இந்தநிலையில் அந்த வழித்தடம் வழியாக வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது
ரெயில் என்ஜின் தடம்புரண்ட விபத்தின் காரணமாக ஜபல்பூர்-கோயம்புத்தூர் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் கரஞ்சாடி ரெயில் நிலையத்தில் 7.21 மணி அளவிலும், மும்பை சி.எஸ்.எம்.டி-கர்மாலி தேஜஸ் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் வீர் ரெயில் நிலையத்தில் 8.46 மணி அளவிலும், நிஜாமுதீன்-எர்ணாகுளம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரெயில் 8.59 மணி அளவிலும் கோலாட் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
மேலும் மும்பை சி.எஸ்.எம்.டி-மட்காவ் மாண்டோவி எக்ஸ்பிரஸ் ரெயில் 9.55 மணி அளவில் ரோகா ரெயில் நிலையத்திலும், எர்ணாகுளம்- ஹசரத் நிஜாமூதீன் எக்ஸ்பிரஸ் 9.01 மணி அளவில் ரத்னகிரி ரெயில் நிலையத்திலும், திருவனந்தபுரம்-லோக்மானிய திலக் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் 9.15 மணி அளவில் ரத்னகிரி ரெயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டது. பணி நிறைவடைந்த பின்னர் அந்த ரெயில்கள் அங்கிருந்து காலதாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
Related Tags :
Next Story