மராட்டிய மாநிலத்தில் 6 மாதத்துக்கு முகக்கவசம் கட்டாயம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் கொரோனா கட்டுக் குள் வந்தாலும் முழுமையாக நீங்கவில்லை. எனவே 6 மாதத்துக்கு பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மும்பை,
,
நாட்டிலே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
அக்டோபரில் மாநிலத்தில் தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது மாநிலத்தில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 60 ஆயிரமாக குறைந்து உள்ளது.
இதற்கிடையே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகவலைதளங்கள் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நேற்று சமூகவலைதளங்கள் மூலமாக பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் கட்டாயம் என கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-
வல்லுநர்கள் இரவு நேர ஊரடங்கு அல்லது மற்றொரு ஊரடங்கை அமல்படுத்த ஆதரவாக உள்ளனர். ஆனால் அந்த நடவடிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து உள்ளது. ஆனால் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. வரும் முன் காப்பதே நலம். குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்காவது பொது இடங்களில் முககவசம் அணிவதை பொதுமக்கள் கண்டிப்பாக பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மற்றவர்களின் உயிருடன் விளையாடி கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆனால் பள்ளிகளை திறப்பதில் பிரச்சினை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல பா.ஜனதா முதல்-மந்திரியை அகங்காரம் பிடித்தவர் என கூறியுள்ளது குறித்து பதில் அளித்த அவர், “மராட்டியம் மற்றும் மும்பையின் நலனில் தனக்கு அகங்காரம் இருக்கிறது” என்றார். மேலும் மாநில அரசு கொரோனா பாதிப்பு, பலியானவர்களின் விவரங்களை வெளிப்படை தன்மையுடன் தெரிவிப்பதாகவும் முதல்-மந்திரி கூறினார்.
மராட்டியத்தில் தற்போது கொரோனா பாதிப்பு 19 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதில் 48 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.
மராட்டியத்தில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 811 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 96 ஆயிரத்து 518 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 17 லட்சத்து 83 ஆயிரத்து 905 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 62 ஆயிரத்து 743 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மேலும் 98 பேர் வைரஸ் நோய்க்கு பலியானதால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 48 ஆயிரத்து 746 ஆக அதிகரித்து உள்ளது.
Related Tags :
Next Story