கர்நாடகத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தல் 3,019 கிராம பஞ்சாயத்துகளில் இன்று ஓட்டுப்பதிவு
கர்நாடகத்தில் முதல்கட்ட பஞ்சாயத்து தேர்தலையொட்டி 3,019 கிராம பஞ்சாயத்துகளில் இன்று(செவ்வாய்க்கிழமை) ஓட்டுப்பதிவு நடக்கிறது. கொரோனா நோயாளிகளும் வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக கிராம பஞ்சாயத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பஞ்சாயத்து தேர்தலை நடத்த உத்தரவிட கோரி கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்தும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கிராம பஞ்சாயத்துகளுக்கு தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. கர்நாடகத்தில் மொத்தம் 5,728 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
இதற்கு 2 கட்டமாக 22 மற்றும் 27-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 30 மாவட்டங்களில் 117 தாலுகாக்களில் 3,019 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 48 ஆயிரத்து 48 பதவிகளுக்கு முதல் கட்டமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதையொட்டி 1 லட்சத்து 17 ஆயிரத்து 383 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 4,377 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர். இதனால் 43 ஆயிரத்து 238 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் இந்த முதல்கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக 45 ஆயிரத்து 128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2 லட்சத்து 70 ஆயிரத்து 268 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. பீதர் மாவட்டத்தில் மட்டும் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் உடல் கவச உடையுடன் வந்து வாக்களிக்க வசதியாக கடைசி ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாக்களித்துவிட்டு சென்ற பிறகு, அந்த வாக்குச்சாவடி மையங்கள், சானிடைசர் கொண்டு தூய்மைப்படுத்தப்படும். அந்த நேரத்தில் வாக்குச்சாவடிகளில் உள்ளவர்கள் கவச உடை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, வாக்குச்சாவடிகளில் சானிடைசர் பயன்படுத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி தொழில் நிமித்தம் காரணமாக வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.
கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மற்றும் தொழிலாளர்களுக்கு இன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்களிப்பதற்காக பெங்களூருவில் தங்கியிருக்கும் வெளியூர்க்காரர்கள் நேற்று சொந்த கிராமங்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் நெலமங்களா உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் சின்னம் இடம் பெறுவது இல்லை. வேட்பாளர்களுக்கு தனி சின்னம் ஒதுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தேர்தல் நடக்கிறது. ஆனால் கட்சிகளின் ஆதரவு பெற்றவர்கள் நிறுத்தப்படுகிறார்கள். ஆயினும் இது உள்ளூர் அளவில் நடைபெறும் தேர்தல் என்பதால், கட்சிகளை கடந்து சொந்தம்-பந்தம், நட்பு, உறவு ஆகியவை முக்கியத்துவம் பெறுகின்றன. அதன் அடிப்படையிலேயே பெரும்பாலானவர்கள் வாக்களிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story