மராட்டியத்தில் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ஜனவரி 5-ந் தேதி வரை அமல்
மராட்டியத்தில் மும்பை உள்பட மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் ஜனவரி 5-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் சமூகவலைதளங்கள் மூலமாக பொதுமக்களிடம் பேசினார். அப்போது அவர் அடுத்த 6 மாதங்களுக்கு மராட்டியத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என்றார். எனினும் அப்போது இரவு நேர ஊரடங்கில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்து இருந்தார்.
மேலும் முதல்-மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில், "நான் மீண்டும் கூறிகொள்வது என்னவென்றால், கொரோனா அச்சுறுத்தல் நீங்கிவிடவில்லை. வைரசில் இருந்து தப்பிக்க உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். பொது இடங்களில் கூட்டம் கூட வேண்டாம். முக கவசம் அணியுங்கள். சமூக இடைவெளியை கடைபிடித்து, கைகளை அடிக்கடி கழுவுங்கள்" என கூறியிருந்தார்.
இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் முதல்-மந்திரி மாநிலத்தில் கொரோனா நிலவரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
இந்தநிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, மராட்டியத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஜனவரி 5-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என மாநில அரசு அறிவித்து உள்ளது.
இந்த உத்தரவின்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர முடியாது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பொது இடங்கள் மற்றும் ஓட்டல்கள், கேளிக்கை விடுதி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க இரவு நேர ஊரடங்கை அரசு மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இங்கிலாந்து நாட்டில் புதுவகை கொரோனா பரவல் ஏற்பட்டு உள்ளதை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.
இரவு நேர ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சகால் கூறியிருப்பதாவது:-
மும்பையில் இரவு நேர ஊரடங்கு பிறக்கப்பட்டு இருப்பது கிறிஸ்துமஸ், புத்தாண்டில் மக்கள் கூடுவதை தடுக்கும். பப்ஸ், இரவு நேர விடுதிகளில் சோதனை நடத்தப்படும். அதே நேரத்தில் இரவு நேர ஊரடங்கால் பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்து பாதிக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோ, டாக்சிகள் மற்றும் இரவு நேர அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும்.
புதுவகை கொரோனா பாதித்த
இங்கிலாந்தில் இருந்து வருபவர்களுக்கு 14 நாட்கள் தனிமை
புது வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ள இங்கிலாந்து பயணிகளை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மராட்டியம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. அதன்படி ஐரோப்பிய மற்றும் மேற்கு ஆசிய நாடுகள், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் இருந்து மராட்டியம் வரும் விமான பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
இதற்காக அவர்களின் கைகளில் தனிமைப்படுத்தப்பட்டதற்கான முத்திரை குத்தப்படும். இதில் தனிமைப்படுத்தப்படும் பயணிகளுக்கு 5 அல்லது 7-வது நாளில் ஆர்.டி.-பி.சி.ஆர். முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அவர்கள் 14 நாட்கள் முடிந்த பிறகு தான் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இதில் வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்த தேவையான ஓட்டல் வசதிகளை ஏற்படுத்தி கொள்ளவும் மாநகராட்சி கமிஷனர்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளில் தொற்று அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த தனி ஆஸ்பத்திரி ஏற்படுத்தவும், இதேபோல விமான நிலையங்களில் பயணிகளுக்கு சோதனை செய்யும் ஊழியர்களுக்கு பி.பி.டி. கிட் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story