திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சீரமைப்பு கோவில் நிர்வாகம் மும்முரம்


திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் சீரமைப்பு கோவில் நிர்வாகம் மும்முரம்
x
தினத்தந்தி 22 Dec 2020 6:28 AM IST (Updated: 22 Dec 2020 6:28 AM IST)
t-max-icont-min-icon

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை சீரமைக்கும் பணியில் கோவில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

காரைக்கால், 

திருநள்ளாறில் உள்ள உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இக்கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிபெயர்ச்சி என்கிறோம்.

இந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால், பக்தர்களின் நலன் கருதி, கோவில் நிர்வாகம் வருகிற ஜனவரி 31-ந்தேதி வரை ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமையும் சனிபகவானை தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவை கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி, கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை, ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் அதிகாலை 3.30 மணி முதல், சமூக இடைவெளி, முககவசத்துடன் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சனிப்பெயர்ச்சி விழாவிற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், கோவில் உள்ளே, வெளியே பக்தர்களின் நலன் கருதி, அடிப்படை வசதிகள் சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, பக்தர்கள் நடந்து செல்லும் பாதை, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக திருநள்ளாறு பேருந்து நிறுத்தம் அருகே, தகரத்தால் ஆன நிழல் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. கோவிலின் 4 வீதிகளிலும் உள்ள குப்பைகளை கோவில் ஊழியர்கள் தீவிரமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல், குண்டும் குழியுமான 4 வீதிகளும் ரூ.4 கோடி செலவில் புதுப்பிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. திருநள்ளாறு முதல் காரைக்கால் நகர் பகுதி் வரையிலான சாலை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. திருநள்ளாறு முழுவதும் மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டன.

காரைக்கால் மாவட்ட கலெக்டரும், திருநள்ளாறு சனி பகவான் கோவில் தனி அதிகாரியுமான அர்ஜுன் சர்மா கூறியதாவது:- வருகிற 27-ந் தேதி 5:22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதையொட்டி சனிபகவான் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. (ஆன்லைன் முகவரி-https:// thirunallarutemple.org/sanipayarchi/) முன்பதிவு செய்யாத யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

சனி பெயர்ச்சி நாள் மட்டும் அல்லாது அன்றைய தேதியிலிருந்து, ஒரு மண்டலத்துக்கு (அடுத்த 48 நாட்கள்) இக்கோவிலில் சனி பகவானை தரிசனம் செய்யலாம். சனி பெயர்ச்சி அன்று கிடைக்கும் பலனை இந்த தரிசனம் பெற்றுத்தரும். இதற்கான விரிவான மற்றும் பாதுகாப்பான நடவடிக்கைகள், கோவில் நிர்வாக அதிகாரி ஆதர்ஷ் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

சனிபெயர்ச்சி அன்று பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் எதுவும் செய்யப்பட மாட்டாது. முக்கியமாக, 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளவர்கள், தரிசனத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story