சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வில்லியனூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து வில்லியனூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2020 6:34 AM IST (Updated: 22 Dec 2020 6:34 AM IST)
t-max-icont-min-icon

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வில்லியனூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வில்லியனூர்,

மத்திய அரசு கடந்த ஒரு மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 உயர்த்தி உள்ளது. அதனை கண்டித்தும், உடனடியாக உயர்த்திய சிலிண்டர் விலையை திரும்பப் பெற வலியுறுத்தியும் புதுவை மாநில தி.மு.க. சார்பில் வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ.(தெற்கு), எஸ்.பி.சிவக்குமார் (வடக்கு) ஆகியோர் தலைமை தாங்கினர். வெங்கடேசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

இதில் தெற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் அருட்செல்வி, மகளிர் அணி அமைப்பாளர் சுசிலா, வடக்கு மாநில மகளிர் அணி அமைப்பாளர் வடிவுக்கரசி என்கிற ஜானகி,. மாநில துணை அமைப்பாளர் கென்னடி, பொருளாளர் சண்.குமாரவேல், பொதுக்குழு உறுப்பினர் வேலவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டத்தில் தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பேசியதாவது:-

பெட்ரோலியம், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கான மூலப் பொருளான ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 45 டாலருக்குத்தான் தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்தியில் பா.ஜ..க. அரசு பொறுப்பேற்றபோது சிலிண்டர் விலை ரூ.400 அளவில் தான் இருந்தது. ஆனால் தற்போது சிலிண்டர் விலை ரூ.700-ஐ தாண்டிவிட்டது. மத்திய அரசு வழங்கி வந்த மானியமும் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இதன் காரணமாக ஏழை மக்களும், பெண்களும் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பா.ஜ.க. தன்னை எதிர்க்கும் கட்சிகளை அழிக்கிறது. அல்லது நட்பு பாராட்டி அடிமை கட்சியாக வைத்துக் கொள்கிறது. ஆனால் பா.ஜ.க.வால் இவை இரண்டையும் செய்ய முடியாத கட்சியாக தி.மு.க. உள்ளது. நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. புதுச்சேரியிலும் தி.மு.க. ஆட்சி அமைந்தால் தான் விரைவாக மாநிலம் நல்ல வளர்ச்சியை அடையும். மத்திய பா.ஜ.க. அரசின் அனைத்து மக்கள் விரோத செயல்களுக்கும் பலத்த எதிர்ப்புகளை பதிவு செய்து, கடிவாளமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே போல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க புதுச்சேரி பிரதேச குழு சார்பில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடந்தது. அப்போது அவர்கள் ஒரு காலி சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்து அதற்கு மாலை அணிவித்து படையலிட்டு ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.


Next Story