தஞ்சை அருகே டிரைவரை தாக்கி கார் கடத்தல்; 2 பேர் கைது


தஞ்சை அருகே டிரைவரை தாக்கி கார் கடத்தல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2020 1:47 AM GMT (Updated: 22 Dec 2020 1:47 AM GMT)

தஞ்சை அருகே டிரைவரை தாக்கி காரை கடத்திய 2 பேரை புதுக்குடி சோதனை சாவடியில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

கள்ளப்பெரம்பூர்,

திருச்சி கலெக்டர் ஆபீஸ் ரோடு மிளகுபாறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 51). இவர், திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள கார் நிறுத்தத்தில் கார் ஓட்டி வருகிறார்.

நேற்றுமுன்தினம் மாலை கார் நிறுத்தத்திற்கு வந்த புதுச்ே்சரி சாரம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த கோட்டையூரை சேர்ந்த ரவிக்குமார் ஆகிய இருவரும் காரை மன்னார்குடிக்கு சென்று வருவதற்காக வாடகைக்கு எடுத்துள்ளனர். காரை செல்வராஜ் ஓட்டினார்.

தாக்கி கொலை மிரட்டல்

பின்னர் இரவு மன்னார்குடியில் இருந்து மீண்டும் அவர்கள் திருச்சி நோக்கி காரில் வந்துள்ளனர். வரும் வழியில் கோவிந்தராஜ், ரவிக்குமார் ஆகிய இருவரும் மது அருந்தியுள்ளனர். போதை அதிகமானதால் இருவரும் காருக்குள்ளேயே இருந்துள்ளனர்.

இந்த நிலையில் தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள தனியார் மருந்து கம்பெனி எதிரே செல்வராஜ் இயற்கை உபாதையை கழிப்பதற்காக காரை நிறுத்தியுள்ளார். அப்போது மது போதையில் இருந்த கோவிந்தராஜ், ரவிக்குமார் ஆகிய இருவரும் காரில் இருந்து கீழே இறங்கி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் செல்வராஜை தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

கார் கடத்தல்

பின்னர் இருவரும் காருக்குள் ஏறி அமர்ந்தனர். காரை கோவிந்தராஜ் ஓட்ட இருவரும் சேர்ந்து காரை கடத்தி சென்றனர். இதனால் வேறு வழியின்றி அருகில் இருந்த செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நடந்தே வந்த செல்வராஜ் நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து செங்கிப்பட்டி போலீசார் வாக்கி-டாக்கி மூலம் காவல் ரோந்து போலீசார் மற்றும் புதுக்குடி சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து செங்கிப்பட்டியில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த காரை புதுக்குடி சோதனை சாவடியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்த புகாரின் ே்பரில் செங்கிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜ்(29), ரவிக்குமார்(39) ஆகிய இருவரையும் கைது செய்து தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர். டிரைவரை தாக்கி காரை கடத்தி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story