தொடர் விபத்துக்களை தடுக்க தொப்பூர் மலைப்பாதையின் வடிவமைப்பை மாற்ற வேண்டும்


தொடர் விபத்துக்களை தடுக்க தொப்பூர் மலைப்பாதையின் வடிவமைப்பை மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 22 Dec 2020 8:02 AM IST (Updated: 22 Dec 2020 8:02 AM IST)
t-max-icont-min-icon

தொடர் விபத்துகளை தடுக்க தொப்பூர் மலைப்பாதையின் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்று டிரைவர்கள் நல சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தர்மபுரி,

தமிழ்நாடு அனைத்து வாகன டிரைவர் நல சங்க தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் டிரைவர்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார்த்திகாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தொப்பூர் மலைப்பாதையில் தினமும் ஏதாவது விபத்துக்கள் ஏற்பட்டு அதன் மூலம் உயிர் சேதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இதை தடுக்க தொப்பூர் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் வடிவமைப்பை வளைவுபாதைகள் இல்லாமல் சீரான சமவெளி பாதையாக மாற்ற வேண்டும். இதன்மூலம் டிரைவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை சார்ந்தவர்களை காப்பாற்ற வேண்டும்.

தகவல் பலகைகள்

இந்த தேசிய நெடுஞ்சாலைப் பகுதியை சீரமைத்து மாற்றி அமைக்கும் வரை தொப்பூர் சுங்கச்சாவடி முதல் தொப்பூர் பஸ் நிலையம் வரை உள்ள பகுதியில் சாலையின் இடது புறம் அல்லது சாலையின் நடுவே ஒவ்வொரு 500 மீட்டர் இடைவெளி பகுதியில் விபத்து அபாயம் குறித்த தகவல் பலகைகளை வைக்க வேண்டும். அந்த தகவல் பலகைகளை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கவேண்டும்.

இந்த தகவல் பலகைகளை எங்கள் டிரைவர்கள் சங்கம் சார்பில் சொந்த செலவில் வைக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்து உள்ளனர்.

Next Story