கொரோனா காரணமாக தாமதமாக சாகுபடி: கரும்பு விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை; பொங்கல் அன்று விலை அதிகரிக்க வாய்ப்பு
கொரோனா காரணமாக தாமதமாக சாகுபடி செய்யப்பட்டதால் கரும்பு எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பொங்கல் அன்று அதன் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தைத்திருநாள்
பொங்கல் என்றாலே தித்திக்கும் கரும்பு தான் நினைவுக்கு வரும். ஆண்டுதோறும் தைத்திருநாளில் புதிதாக அறுவடை செய்த நெல்லை புத்தரிசியாக்கி ஆதவனுக்கு பொங்கல் படைத்து நன்றி கடன் செலுத்துவது வழக்கம். அப்போது மஞ்சள், கரும்பு உள்ளிட்டவைகளை வைத்து வழிபடுவார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தை திருநாளுக்கு மக்களுக்கு கிடைக்கும் வகையில், மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்களை 11 மாதத்துக்கு முன்பே விவசாயிகள் பயிரிட தொடங்கி விடுவார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கரும்பு, மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் கரும்பு சாகுபடியில் பெரும்பாலான விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
விவசாயிகள் கவலை
இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிடுவதில் தயக்கம் காட்டினார்கள். ஊரடங்கு காரணமாக விதைகள் கிைடப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பலர் தாமதமாக தான் கரும்புகளை பயிரிட்டு இருந்தனர்.தற்போது பொங்கலுக்கு இன்னும் சில நாட்்களே உள்ளன. இருப்பினும் திருப்பத்தூர் பகுதியில் கரும்பு போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து திருப்பத்தூரை அடுத்த தென்கரை நயினார்புரத்தில் கரும்பு பயிரிட்ட விவசாயி கோபாலன் கூறியதாவது:-
ஆண்டுதோறும் பொங்கல் விழாவிற்காக எனது தோட்டத்தில் கரும்பு மற்றும் மஞ்சள் பயிரிட்டு அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். ஆண்டுதோறும் 1 ஏக்கரில் கரும்பு மற்றும் அரை ஏக்கரில் மஞ்சள் பயிரிட்டு அறுவடை செய்வேன். இந்த கரும்பு விவசாயம் என்பது 11 மாத கால பயிராகும். மாசி மாதம் பயிரிட்டால் தான் தை மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே அறுவடை செய்ய முடியும்.
கடந்த ஆண்டு 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு ரூ.300 வரை விற்பனையானது. இதனால் பயிரிட்ட செலவிற்கு ஏற்ப ஓரளவிற்கு லாபத்தை பெற முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கரும்பு பயிர் நட முடியாமல் பின்தங்கி தான் சாகுபடி செய்யப்பட்டது.
விலை உயர்வு
மேலும் அந்த காலக்கட்டத்தில் போதிய விதை இல்லாமல் இருந்ததால் நடமுடியாமல் காலம் தாழ்த்தி தான் பயிரிட்டேன். மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரும்பு மற்றும் மஞ்சள் விலை அதிகரிப்பதால் போட்ட முதல் தொகையை எடுக்க முடியுமா? என்ற மனக்குழப்பத்தில் தற்போது வெறும் 25 சென்ட் வரை கரும்பு மட்டும் பயிரிட்டுள்ளேன். இந்தாண்டு சுமார் 25 சென்ட் கரும்பு பயிரிட விதை நடவு, உரம் போடுதல் உள்ளிட்டவைகளுக்காக ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன்.
இதேபோல் கடந்த ஆண்டு மஞ்சள் சுமார் 10 சென்ட் வரை ரூ.10ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டேன். ஆனால் கடந்த ஆண்டு போதிய அளவு விளைச்சல் இல்லாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தேன். ஆதலால் இந்த ஆண்டு மஞ்சள் பயிரிடவில்லை. மேலும் கடந்த ஆண்டு ஒரு கட்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு போதிய அளவில் விளைச்சல் இல்லாமல் உள்ளதால் ரூ.400 முதல் ரூ.500 வரை கரும்பு விலை உயர வாய்ப்புள்ளது. இங்கு விளையும் கரும்பை சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கரும்பு வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் நேரடியாக வாங்கி செல்வார்கள். மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் கரும்பு பயிரிட்ட இடங்களில் மழைநீர் புகுந்ததால் கரும்பு விவசாயத்தில் பெரும் பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story