விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு: குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி


விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு: குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 22 Dec 2020 3:59 AM GMT (Updated: 22 Dec 2020 3:59 AM GMT)

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி சேலத்தில் குழந்ைதகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் ஏ.என்.மங்கலம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் 8 பெண்கள் நேற்று தங்களது 7 குழந்தைகளுடன் சேலத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், தங்களது பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்தும், ஆடுகள் வழங்க மறுப்பதாக கூறி திடீரென தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடுத்து நிறுத்தம்

இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீக்குளிக்க முயன்ற பெண்களை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு மூலம் வழங்கப்பட்டு வரும் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் எங்கள் கிராமத்தில் கடந்த 18-ந் தேதி 218 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் மிகவும் வசதி படைத்தவர்களுக்கும், ஏற்கனவே இந்த திட்டத்தில் பயன் பெற்றவர்களையும் தேர்வு செய்து டோக்கன் வழங்கி உள்ளனர். விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு தங்களது பெயர்கள் பயனாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தும் சிலரின் தூண்டுதலின் பேரில் இலவச ஆடுகள் வழங்கமறுக்கிறார்கள்.

தகுதியற்ற பயனாளிகள்

தகுதியற்ற பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் இத்திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவரிடம் விளக்கம் கேட்டால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதற்கு கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளும் துணை போகிறார்கள். எனவே விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்ட முறைகேடுகளை நீக்கி தகுதியான ஏழை, எளிய மக்ககளுக்கு ஆடுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story