ஊட்டியில் உறைபனி தாக்கத்தால் கடுங்குளிர் நிலவுகிறது; குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியசாக உள்ளது: பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர்

குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரிசெல்சியசாக இருப்பதுடன், ஊட்டியில் உறைபனி தாக்கத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.
காலநிலை மாற்றம்
மலை மாவட்டமான நீலகிரியில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா மையங்கள் அதிகம் உள்ளன. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம். இங்கு டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுகிறது. இந்த ஆண்டில் பருவமழை போதிய அளவு பெய்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 முறை உறைபனி கொட்டியது. பின்னர் காலநிலை மாற்றத்தால் பனி தாக்கம் தள்ளி போனது. சமீபத்தில் 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்யவில்லை. இதற்கிடையே தொடர்ந்து பகலில் வெயிலும், இரவில் கடுங்குளிரும் நிலவி வருகிறது.
உறைபனி தாக்கம்
இந்த நிலையில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை நேரங்களில் உறைபனி தாக்கம் காணப்படுகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், குதிரை பந்தய மைதானம், ஊட்டி ரெயில் நிலைய வளாகம், காந்தல் விளையாட்டு மைதானம், தலைகுந்தா உள்ளிட்ட இடங்களில் புல்வெளியின் மீது உறைபனி படர்ந்து இருப்பதை காண முடிகிறது.
அதிகாலையில் கடும் குளிர் நிலவுவதால் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு கூலி வேலைக்காக செல்லும் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்தும், நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தும் வருகின்றனர்.
8 டிகிரி செல்சியஸ்
ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மாலையில் சுற்றுலா தலங்களை கம்பளி ஆடைகள், தொப்பி அணிந்த படி கண்டு ரசிக்கின்றனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் குளிரை போக்க நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர். வீடுகளில் பொதுமக்கள் ஹீட்டர் மூலம் வெப்பப்படுத்தி வருகின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உறை பனி காரணமாக புல்வெளிகள் கருகாமல் இருக்க தினமும் காலை மற்றும் மாலையில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.
வெப்பநிலை குறைவு
கடந்த சில தினங்களுக்கு முன்பு குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. தற்போது வெப்பநிலை குறைந்து உள்ளது. மாலை நேரங்களில் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக இருக்கிறது. இதனால் டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் லாரிகள், வாகனங்களை காலை நேரங்களில் இயக்க முடிவது இல்லை. என்ஜின் மீது கொதிக்கும் சூடு தண்ணீர் ஊற்றிய பின்னர் இயக்கப் படுகிறது. உறைபனி தாக்கம் தொடர்ந்து இருந்தால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்படும் என்று விவசாயி கவலையுடன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story