கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் விசாரணை
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் தற்போது 912 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 741 தமிழர்கள் தங்கி உள்ளனர். இங்கு பதிவில் உள்ளவர்கள் உரிய அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது முகாம் பதிவில் உள்ள சிலர் உரிய அனுமதியின்றி சென்னையின் புறநகர் பகுதிகளில் வசித்து வருவதாகவும், அதே சமயத்தில் முகாமில் பதிவு இன்றி பலர் தங்கியிருப்பதாகவும் மாவட்ட கியூ பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கள்ளத்தோணியில் சிலர் உரிய அனுமதியின்றி இலங்கை உள்பட பல்வேறு நாடுகளுக்கு செல்ல முயன்று பின்னர் கியூ பிரிவு போலீசாரால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிடிபட்டு மீண்டும் முகாமுக்கு கொண்டு வரப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வரும் செயலாக உள்ளது.
கடந்த 20-ந்தேதி நள்ளிரவில் இலங்கையில் உள்ள தலைமன்னார் பகுதியில் உரிய அனுமதியின்றி தமிழ்நாட்டில் இருந்து கடல் வழியாக கள்ளத்தோணி மூலம் வந்த 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதில் ஜெயசீலன் (வயது 37) , யுகதாஸ் (39), செல்டன் பிரிஸ் (38) ஆகியோர் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இலங்கையில் கைது செய்யப்பட்டு உள்ள மேற்கண்ட 3 பேரின் முகாம் பதிவை நேற்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரித்தி ரத்து செய்து அவர்களுக்கான அரசு சலுகைகளை நிறுத்தம் செய்துள்ளார். ஆனால் அவர்களின் குடும்பத்தார் தற்போதும் கும்மிடிப்பூண்டி முகாமில் பதிவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முகாம் பதிவை பெற்று உரிய அனுமதியின்றி வெளியிடங்களில் தங்கி உள்ள நபர்கள் யார்? முகாமை விட்டு நிரந்தரமாக வெளியே சென்றவர்கள் யார்? என்பது குறித்து முகாமில் மாவட்ட கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் முகாம் பதிவு பெற்ற அனைவரும் முகாமில்தான் தங்கி உள்ளனரா? அப்படி இல்லையென்றால் வெளியிடங்களில் தங்குவதற்கு அவர்கள் உரிய அனுமதியை பெற்று உள்ளார்களா? எனவும் அவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இது தவிர முகாமில் சிப்காட் போலீஸ் நிலையத்தின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே இயங்கி வந்த புறகாவல் நிலையம் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
இதனால் முகாமை முழுமையாக கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதனை மீண்டும் திறந்திட வேண்டும் என கும்மிடிப்பூண்டி தாசில்தார் சார்பாக மாவட்ட கலெக்டருக்கு கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story