திருப்போரூர் அருகே, ரவுடி வெட்டிக்கொலை - உடல் தீ வைத்து எரிப்பு


திருப்போரூர் அருகே, ரவுடி வெட்டிக்கொலை - உடல் தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2020 12:27 AM IST (Updated: 23 Dec 2020 12:40 AM IST)
t-max-icont-min-icon

திருப்போரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டு அவரது உடல் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன். போலீஸ் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மகன் சதீஷ்குமார் (39). ரவுடியான இவர் மீது மறைமலை நகர், வண்டலூர், பல்லாவரம், வேளச்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் கட்டபஞ்சாயத்து, கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில் 2-வது மனைவி லட்சுமி மற்றும் மகனுடன் சதீஷ்குமார் வசித்து வந்தார்.

நேற்று அதிகாலை மேலையூர் கிராமப்பகுதியில் சுடுகாடு அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

பிணமாக கடந்தவர் சதீஷ் குமார் என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் தனது தந்தையின் சமாதிக்கு நண்பர் ஒருவருடன் சதீஷ் குமார் காரில் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் காரை வழிமறித்து சதீஷ்குமாரின் தலை, கழுத்து, வயிறு, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் வெட்டி கொலை செய்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மயானத்துக்கு இழுத்து சென்றுள்ளனர். பின்னர் உடலை அவரது தந்தையின் சமாதிக்கு அருகே வைத்து தீயிட்டு எரித்து கார் விபத்து நடந்ததுபோல் காட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில்:-

சதீஷ்குமாருக்கு 3 மனைவிகள் உள்ளனர் என்பதும் முதல் மனைவி சதீஷ்குமாரை விட்டு பிரிந்து உள்ளதாக கூறப்படுகிறது, 2-வது மனைவி லட்சுமி மேலையூர் கிராமத்தில் கணவர் சதீஷ்குமாருடன் தங்கியிருந்தார். 3-வது மனைவி முள்ளிபக்கம் கிராமத்தில் 4 வயது மகனுடன் வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. 2-வது மனைவியான லட்சுமி சதீஷ்குமாருடன் சேர்ந்து முதல் கணவரை கொலை செய்த வழக்கு கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story