புத்தாண்டை வீடுகளில்தான் கொண்டாட வேண்டும்: கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடத்த போலீஸ் அனுமதி பெற வேண்டும் - கமிஷனர் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் இரவு பிரார்த்தனை நடத்த போலீஸ் அனுமதி பெற வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார். புத்தாண்டை வீடுகளில்தான் பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை,
குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்ட 863 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கலந்து கொண்டு, மீட்கப்பட்ட செல்போன்களை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காணாமல் போன செல்போன்கள் பற்றி புகார் கொடுத்தால் கூட உடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காணாமல் போன செல்போன்களை எடுத்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. அவர்களிடம் இருந்து செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்போம்.
திருட்டு செல்போன்களை வாங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் திருட்டு செல்போன்களை வாங்க அமைப்பு ரீதியாக செயல்பட்ட இரண்டு குழுக்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செல்போனை பறிப்பவர்கள் பெரும்பாலும் இரண்டு சக்கர வாகனத்தில் வந்துதான் பறிக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களில் இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடற்கரை, சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அரசு தடை விதித்துள்ளது. இதில் அரசு விதித்துள்ள விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்படும். தடையை மீறி கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. கடற்கரை பகுதிக்கு புத்தாண்டு கொண்டாட செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாடவிடாமல் உரிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படும். பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கள் குடும்பத்தினருடன் புத்தாண்டு கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் இரவு பிரார்த்தனை நடத்த போலீசிடம் விண்ணப்பிக்க வேண்டும். உரிய ஆய்வு செய்து பிரார்த்தனையில் கலந்துகொள்ள எத்தனை பேருக்கு அனுமதி வழங்குவது என்பது பற்றி முடிவு செய்யப்பட்டு, கமிஷனர் அலுவலகம் மூலம் உரிய அனுமதி வழங்கப்படும்.
இது போல புத்தாண்டையொட்டி இந்து கோவில்களிலும் பக்தர்களை அனுமதிப்பது பற்றி, இந்து சமய அறநிலையத்துறையினரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ கலந்தாய்வில், நீட் சான்றிதழை போலியாக சமர்ப்பித்த வழக்கில் பெரியமேடு போலீசாரே தொடர்ந்து விசாரணை நடத்துவார்கள். வேறு போலீஸ் பிரிவிற்கு மாற்றும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர்கள் அருண், தினகரன், கண்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story