பல கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் தப்பிக்க அப்பாவியை கொன்று தற்கொலை நாடகமாடியவர் கைது


பல கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் தப்பிக்க அப்பாவியை கொன்று தற்கொலை நாடகமாடியவர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2020 3:00 AM IST (Updated: 23 Dec 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

பல கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் தப்பிக்க சாலையோரம் வசித்தவரை கொலை செய்து தற்கொலை நாடகமாடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

புனே, பனேர் பகுதியில் உள்ள மும்பை- பெங்களூரு நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 29-ந் தேதி போலீசார் பாதி எரிந்தநிலையில் ஒருவரின் உடலை மீட்டனர். விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர் சாலையோரம் வசித்து வந்த சந்தீப் மெயின்கார் என்பது தெரியவந்தது. ஆனால் அவரது பையில் இருந்த கடிதத்தால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.

அந்த கடிதத்தில் தனது பெயர் மெகபூப் சேக் என்பதும், கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த சம்பவத்தின் சதி வலை குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். அப்போது தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட மெகபூப் சேக்(வயது52) பற்றிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அவருக்கு இரு மனைவிகள் என்றும், பல கோடி ரூபாய் கடனில் தவிப்பதாகவும் தெரியவந்தது. மேலும் அவர் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை தேடினர். இதில் போலீசார் வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற மெகபூப் சேக்கை தவுன்ட் ரெயில் நிலையத்தில் வைத்து பிடித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நம்ப முடியாத அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

மெகபூப் சேக் கடனை திருப்பி செலுத்தாமல் தப்பிக்க ஒரு திட்டம் போட்டுள்ளார். இதன்படி அவர் சாலையோரம் வசிக்கும் அப்பாவி சந்தீப்பை கொலை செய்தார். பின்னர் அவரது உடலை பகுதியளவு எரித்து மும்பை - பெங்களூரு சாலையில் போட்டு இருக்கிறார். மேலும் எரிந்த உடல் தன்னுடையது தான் என கடன் கொடுத்தவர்கள் மற்றும் போலீசாரை நம்ப வைக்க கடிதம் எழுதி வைத்ததையும் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பல கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் தப்பிக்க அப்பாவி ஒருவரை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய மெகபூப் சேக்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story