உருமாறிய கொரோனாவால் பீதி எதிரொலி: இங்கிலாந்து நாட்டில் இருந்து மும்பை வந்த பயணிகள் தனிமை -ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்
உருமாறிய கொரோனா பீதியால் இங்கிலாந்து நாட்டில் இருந்து மும்பை வந்த பயணிகள் ஓட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மும்பை,
இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
உருமாறிய இந்த நோய் தொற்று, சாதாரண கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. அதனால், நேற்று நள்ளிரவு முதல் 31-ந் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கவும், நேற்று முன்தினமும், நேற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு விமான நிலையத்திலேயே கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் இங்கிலாந்தில் இருந்து மராட்டியம் வரும் பயணிகளுக்கு மராட்டிய அரசு வழிகாட்டுதலை வெளியிட்டது. மேலும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.
இந்தநிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு வரை 5 விமானங்கள் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் ஒரு விமானம் ரத்து ஆனது. ஒரு விமானம் இரவில் தாமதாக வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் இங்கிலாந்தில் இருந்து நேற்று 3 விமானங்கள் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கின.
இதில் 590 பயணிகள் வந்தனர். இதில் 187 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். இவர்கள் அருகே உள்ள ஓட்டல்களில் 7 நாட்கள் சொந்த செலவில் தனிமைப்படுத்தப்பட்டனர். 7-வது நாளில் அவர்களுக்கு ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை செய்யப்படும். அதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் ஆஸ்பத்திரி அல்லது ஓட்டல்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். பயணிகள் அனைத்து செலவுகளையும் அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நோய் தொற்று கண்டறியப்படாதவர்கள் வீடுகளில் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மும்பை மாநகராட்சி செய்துள்ளது.
மேலும் மராட்டியத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்த 167 பேர் தங்களது மாவட்டங்களுக்கு விமானம் அல்லது சாலை மார்க்கமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
மற்ற மாநிலங்களை சேர்ந்த 236 பேர் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு விமானங்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story