விசாரணைக்காக அழைத்து சென்றபோது திடீரென விசைப்படகில் 2 போலீஸ்காரர்களை கடத்திய 12 மீனவர்கள் கைது - மஞ்சேஷ்வர் கடல் பகுதியில் சம்பவம்


விசாரணைக்காக அழைத்து சென்றபோது திடீரென விசைப்படகில் 2 போலீஸ்காரர்களை கடத்திய 12 மீனவர்கள் கைது - மஞ்சேஷ்வர் கடல் பகுதியில் சம்பவம்
x
தினத்தந்தி 23 Dec 2020 5:47 AM IST (Updated: 23 Dec 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சேஷ்வர் கடல் பகுதியில், விசாரணைக்காக அழைத்து சென்றபோது திடீரென 2 போலீஸ்காரர்களை விசைப்படகில் மீனவர்கள் கடத்திச் சென்றனர். அந்த 12 மீனவர்களையும் போலீசார் கைது செய்து, அவர்களின் பிடியில் இருந்த 2 போலீஸ்காரர்களையும் மீட்டனர்.

பெங்களூரு,

உத்தர கன்னடா மாவட்டம் மஞ்சேஷ்வர் கடல் பகுதியில் கடலோர காவல் படை போலீசார் தங்களது ரோந்து கப்பலில் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஏராளமான விசைப்படகுகளை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது அங்கு ஒரு விசைப்படகு வந்தது. அந்த விசைப்படகில் 12 மீனவர்கள் இருந்தனர். அந்த விசைப்படகை மடக்கி போலீசார் ஆவணங்களை சரிபார்த்தனர்.

அப்போது போலீசாருக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விசைப்படகை மஞ்சேஷ்வர் துறைமுகத்திற்கு ஓட்டிச்செல்லுமாறு அந்த விசைப்படகில் இருந்த மீனவர்களிடம் போலீசார் கூறினர். அவர்களிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருந்தனர். இதையடுத்து அந்த விசைப்படகில் ரகு, சுதீர் ஆகிய 2 போலீசார் ஏறிக்கொண்டனர்.

அதையடுத்து அந்த விசைப்படகு மஞ்சேஷ்வர் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது. அந்த விசைப்படகு மஞ்சேஷ்வர் துறைமுகத்தை நோக்கி வருவதை துறைமுகத்தில் இருந்த போலீசாரிடம், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த விசைப்படகு மஞ்சேஷ்வர் துறைமுகத்திற்கு செல்லாமல் திடீரென நடுக்கடல் நோக்கி பயணித்தது.

அதாவது அந்த விசைப்படகில் இருந்த 12 மீனவர்கள், 2 போலீஸ்காரர்களை கடத்திக்கொண்டு நடுக்கடலுக்கு சென்றனர். இதுபற்றி போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து மஞ்சேஷ்வர் கடலோர காவல் படை போலீசாரும், மங்களூரு கடலோர காவல் படை போலீசாரும் இணைந்து தங்களது ரோந்து கப்பலில் கடலுக்குள் விரைந்து சென்றனர். பின்னர் போலீஸ்காரர்களை கடத்திக்கொண்டு சென்ற அந்த விசைப்படகை சுற்றி வளைத்தனர். அதையடுத்து அந்த விசைப்படகு மங்களூரு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து அந்த விசைப்படகில் இருந்த 12 மீனவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் கடத்திச்சென்ற கடலோர காவல் படை போலீஸ்காரர்கள் ரகு, சுதீர் ஆகிய 2 பேர் மீட்கப்பட்டனர். பின்னர் கைதான 12 மீனவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story