முதல்கட்ட கிராம பஞ்சாயத்து தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு முதியோர், இளைஞர்கள் ஆர்வமாக வாக்களித்தனர்
கர்நாடகத்தில் முதல்கட்டமாக நேற்று நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் விறுவிறுப்பான முறையில் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. முதியோர்களும், இளைஞர்களும் ஆர்வமாக வாக்களித்தனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மொத்தம் 5,728 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
இதற்கு 2 கட்டங்களாக 22 மற்றும் 27-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் 30 மாவட்டங்களில் 117 தாலுகாக்களில் 3,019 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 48 ஆயிரத்து 48 பதவிகளுக்கு முதல் கட்டமாக 22-ந் தேதி (அதாவது நேற்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையொட்டி 1 லட்சத்து 17 ஆயிரத்து 383 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 4,377 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி வாக்காளர்களின் வசதிக்காக 45 ஆயிரத்து 128 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. முதல்கட்டமாக 3,019 கிராம பஞ்சாயத்துகளில் 43 ஆயிரத்து 238 பதவிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. உள்ளூர் தேர்தல் என்பதால், மற்ற தேர்தல்களை காட்டிலும் பொதுமக்கள் இதில் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். காலை முதலே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துவிட்டு சென்றனர். காலையில் உடல் நடுங்கும் அளவிற்கு இருந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மல்லையனபுராவில் 101 வயது மூதாட்டி முத்தம்மா என்பவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
முதியோர், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்தனர். ஒரு சில இடங்களில் வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இத்தகைய சிறிய அளவிலான சம்பவங்களை தவிர ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற்றது. கடைசி ஒரு மணி நேரத்தில், கொரோனா நோயாளிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பாகல்கோட்டை மாவட்டம் சேந்தூர் கிராமத்தை சேர்ந்த நடமாட முடியாத மூதாட்டி ஒருவரை அந்த கிராம மக்கள் ஒரு நாற்காலியில் உட்கார வைத்து வாக்குச்சாவடிக்கு தூக்கி வந்து வாக்களிக்க வைத்தனர். தார்வார் மாவட்டம் நாகேந்திரா கிராமத்தில் ஒரு பெண் கள்ள ஓட்டுப்போட முயன்றார். அதை தடுக்கும் பொருட்டு பூத் ஏஜெண்டுகள் 2 பேர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து நிலைமையை சரிசெய்தனர்.
பல்லாரி மாவட்டம் கம்பகல்லு கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்பு வரை ஏலம் மூலம் அங்கு பதவிகள் விற்பனை செய்யப்பட்டன. ராமநகர் மாவட்டம் ஹரிசிந்தி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு பெண் வேட்பாளர் மஞ்சுளா, வாக்குச்சாவடி நுழைவு வாயில் வாசல் கதவுக்கு மஞ்சள்-குங்குமம் வைத்து ஊதுவர்த்தி ஏற்றி பூஜை செய்து வணங்கினார்.
தேர்தல் பணியில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 268 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குச்சாவடிகளில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்பட்டது. பீதர் மாவட்டத்தில் மட்டும் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்குச்சாவடிகளில் சானிடைசர் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வந்து வாக்களித்தனர். வாக்குச்சாவடி நுழைவு பகுதியில் வாக்காளர்களின் கைகளில் வைரசை கொல்லும் சானிடைசர் திரவம் தெளிக்கப்பட்டது. கிராம பஞ்சாயத்து தேர்தலையொட்டி தொழில் நிமித்தம் காரணமாக வெளியூர்களில் தங்கி இருந்தவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால் கிராமங்களில் பஞ்சாயத்து தேர்தல், திருவிழாவை போல் களைகட்டி இருந்தது. 2-வது கட்ட தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story