கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையில்லை - நாராயணசாமி அறிவிப்பு


கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையில்லை - நாராயணசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 23 Dec 2020 6:24 AM IST (Updated: 23 Dec 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடையில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் மற்றும் அரசு செயலாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசிகள் போடுவது தொடர்பாக மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை தெரிவித்துள்ளது. அடுத்த (ஜனவரி) மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ தடுப்பூசி மருந்து வந்துவிடும்.

அந்த மருந்துகளை வைப்பதற்கு தேவையான கட்டமைப்புகள், வாகன வசதி தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு தேவையான நிதி முதல்-அமைச்சரின் கொரோனா நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். எனவே கட்டமைப்பு வசதிகளை உருவாக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக புதுவையில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நிவாரண பணிகளுக்கு இடைக்காலமாக ரூ.100 கோடியும், ஒட்டுமொத்தமாக ரூ.400 கோடியும் வழங்க மத்திய அரசை கேட்டுள்ளேன். இதற்கிடையே மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ரூ.48 கோடிக்கு அறிக்கை தயாரித்துள்ளனர். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் இப்போது சரியாக இருக்காது என்று மத்தியக்குழுவிடம் தெரிவித்துள்ளேன்.

தற்போது மாநில பேரிடர் பாதுகாப்பு நிதியில் ரூ.10 கோடி உள்ளது. அதில் சாலை சீரமைப்புக்கு தேவையான நிதியை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்போது பண்டிகை காலம் வருகிறது. இந்தநிலையில் கலெக்டர் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக விழாக்கள் நடத்தக்கூடாது என்று கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய பொதுவான ஒரு தீர்ப்பினை வைத்து இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

விரைவில் சனிப்பெயர்ச்சி விழா, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் வருகிறது. கிறிஸ்துமஸ் தினத்தன்று கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் வழிபாடு நடத்துவார்கள். அதற்கு எந்த தடையும் கிடையாது. புதுவருடத்தை பொறுத்தவரை ஓட்டல்களில் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 200 பேர் வரை கூடலாம்.

கடற்கரை பகுதியில் சமூக இடைவெளியை கடைப் பிடித்து, முகக்கவசம் அணிந்து புத்தாண்டை கொண்டாடலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது. அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. விதிமுறைகளை கடைப்பிடிப்பது பற்றி காவல்துறை பார்த்துக்கொள்ள வேண்டும்.

புதுவையில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் தடை கிடையாது. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி எத்தனை ஆயிரம் பேர் வேண்டுமானாலும் கூடலாம். புத்தாண்டு தினத்தன்று ஓட்டல்களில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர்களின் கருத்துகளை கேட்டு முடிவு செய்வோம்.

அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவின் 25-ம்ஆண்டு வெள்ளிவிழா அரசு சார்பில் 6-ந்தேதி கொண்டாடப்படும். அதில் நாங்கள் அனைவரும் கலந்துகொள்வோம்.

புதுவை மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி உள்ளோம். எவ்வளவு தொகை என்பது குறித்து விரைவில் சொல்லுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story